ஐ.பி.எல் 2024:



ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 41 வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 


அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி களம் இறங்கினார்கள். இவர்களது ஜோடி அதிரடியான தொடக்கத்தை பெங்களூரு அணிக்கு அமைத்துக் கொடுத்தனர். 48 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் நடராஜன் பிரித்தார். மொத்தம் 12 பந்துகள் களத்தில் நின்ற ஃபாஃப் டு பிளெசிஸ் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 25 ரன்களை எடுத்தார்.


அப்போது களத்தில் நின்ற விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் வில் ஜாக்ஸ். இவர்களது ஜோடி அதிரடியாக விளையாடி பெங்களூரு அணிக்கு ரன்களை வேகமாக சேர்த்துக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் வில் ஜாக்ஸ் மார்க்கண்டே பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார். 9 பந்துகள் களத்தில் நின்ற இவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.





இதனிடையே விராட் கோலியுடன் இணைந்தார் ரஜத் படிதார். இன்றைய போட்டியில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார் ரஜத் படிதார். அந்தவகையில் மொத்தம் 20 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி அரைசத்தை பதிவு செய்தார்.  140 ரன்கள் எடுத்திருந்த போது விராட் கோலி தன்னுடைய விக்கெட்டை ஜெய்தேவ் உனத்கட்டிடம் பறிகொடுத்தார். 43 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 51 ரன்கள் எடுத்தார். 


207 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு:






இதனிடையே மஹிபால் லோமரோர் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க களத்தில் நின்ற கேமரூன் கிரீன் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவ்வாறாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ளது. ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஜெய்தேவ் உனத்கட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.