ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் இந்த சீசனில் இன்று (ஏப்ரல் 27) 42 வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.


முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஜாக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் பொரேல் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.  பின்னர் களம் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஷாய் ஹோப் ரிஷப் பண்டும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள்.


ஜாக் ஃபிரேசர் மெக்குர்க்  27 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என மொத்தம் 87 ரன்கள் எடுத்தார். அபிஷேக் பொரேல் 36 ரன்கள், ஷாய் ஹோப் 41 ரன்கள், ரிஷப் பண்ட் 29 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்டுடன்  இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


அதன்படி டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தவகையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.


புள்ளிப்பட்டியலில் முன்னேறிய டெல்லி:






இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியோ 9 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 5 போட்டிகளில் தோல்வி உடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.


புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், நான்காவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் உள்ளது. 5 வது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.