நடப்பு ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்த்தது.
அதன்பின்னர் 197 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது. பவர்ப்ளேவின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜாஸ் பட்லரும் 7வது ஒவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வாலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். அப்போது அணியின் ஸ்கோர் 60-ஆக இருந்தது.
அதன் பின்னர் கைகோர்த்த சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் ப்ராக் கூட்டணி லக்னோ அணியின் பந்து வீச்சினை சிரமமே இல்லாமல் எதிர்கொண்டு ரன்கள் சேர்த்து வந்தது. இதனால் இவர்கள் கூட்டணியைப் பிரிக்க லக்னோ அணியின் கேப்டன் இம்பேக்ட் ப்ளேயராக அமித் மிஸ்ராவை ஆட்டத்தின் 9வது ஓவரில் களமிறக்கினார். தான் வீசிய 9வது ஓவரின் 4வது பந்தில் ரியான் ப்ராக் விக்கெட்டினை தட்டித்தூக்கி ஒட்டுமொத்த லக்னோ மைதானத்தையும் ஆர்ப்பரிக்கச் செய்தார் மிஸ்ரா.
அடுத்து வந்த துருவ் ஜுரேல் கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் இணைந்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தினார். இவர்கள் கூட்டணியைப் பிரிக்க லக்னோ அணியின் கேப்டன் தொடங்கி பவுண்டரி லைனில் நின்று கொண்டு இருந்த பயிற்சியாளர் வரை பல முயற்சிகளை எடுத்தும் எந்த பயனும் அளிக்கவில்லை.
17 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் கடைசி மூன்று ஓவர்களில் ராஜ்ஸ்தான் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் கிடைத்த ரன் அவுட் வாய்ப்பினை மோசின் கான் தவறவிட்டார். ஆனால் சஞ்சு சாம்சன் 28 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். சாம்சன் மற்றும் ஜுரேல் கூட்டணி 53 பந்தில் 100 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து துருவ் ஜுரேல் 31 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். இந்த அரைசதம் இவரது முதல் ஐபிஎல் அரைசதமாக பதிவானது.
இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் இருந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சன்சு சாம்சன் 33 பந்தில் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதேபோல், துருவ் ஜுரேல் 34 பந்தில் 5 பவுண்டரி இரண்டு சிக்ஸருடன் 54 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். இந்த அரைசதம் துருவ் ஜுரேலின் முதல் ஐபிஎல் சதமாக பதிவாகியுள்ளது.