ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(மே1) 49 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கர்ரன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள்.


இவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 64 ரன்கள் வரை சேர்த்தனர். நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அஜிங்க்யா ரஹானே ஹர்ப்ரீத் ப்ரார் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் டாரில் மிட்செல் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றாவது வீரராக சிவம் துபே களம் இறங்கினார். கடந்த போட்டிகளில் எல்லாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை குஷி படுத்திய சிவம் துபே இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கோல்டன் டக் அவுட் ஆனார். இந்த விக்கெட்டையும் ஹர்ப்ரீத் ப்ரார் தான் எடுத்தார்.


163 ரன்கள் இலக்கு:


இவரது விக்கெட்டைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சமீர் ரிஸ்வி களம் இறக்கினர். ஜடேஜாவும் எல்.பி.டபூள்யூ ஆகி நடையைக்கட்டினார். 70 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறியது. அதேநேரம் மறுபுறம் சமீர் ரிஸ்வி கொஞ்சம் நிதானமாக விளையாடி வந்தார். மெல்ல மெல்ல 100 ரன்களை கடந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது சமீர் ரிஸ்வி 23 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார் மொயின் அலி. இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை பறிகொடுத்தார்.


48 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 62 ரன்கள் குவித்தார். கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கையில் எம்.எஸ்.தோனி களம் இறங்கினார். மொயின் அலி 15 ரன்களில் நடையைக்கட்டினார். தோனி கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி 163 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது. முன்னதாக இந்த சீசனில் 10 லீக் போட்டிகளில் விளையாடிய தோனி முதன் முறையாக விக்கெட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.