நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்ற முறை விட்ட இடத்தில் அப்படியே துவங்கி டேபிள் டாப்பராக மாறி உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐயும், இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-ஐயும் வென்று சாம்பியன் அணி என்று மீண்டும் நிரூபித்து வருகிறது. இந்த வருடம் அவர்களது அணியில் பேட்டிங்கை பலப்படுத்தும் நோக்கில் புது வரவாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னை கொண்டு வந்தனர். ஆனால் ஒரு பந்து கூட பேட்டிங் பிடிக்காமல் அவரை திருப்பி அனுப்ப வேண்டிய சங்கடமான சூழல் குஜராத் அணிக்கு ஏற்பட்டது. முதல் போட்டியில் பீலடிங் செய்யும்போது பறந்து கேட்ச் பிடித்த வில்லியம்சன் கீழே விழுந்து முழங்காலில் காயம் ஏற்படுத்திக்கொண்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் தொடரை விட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஒரு வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய சூழலில் இலங்கை அணியின் அதிரடி வீரர் தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்துள்ளது குஜராத் அணி.
ஐபிஎல்-இல் இலங்கை வீரர்கள்
ஐபிஎல்-இல் இலங்கை அணி வீரர்களை ஃபாரின் வீரர்களாக நினைப்பதற்கு சிரமமாக உள்ளதாலோ என்னவோ, மற்ற வெளிநாட்டு வீரர்களிடம் காட்டும் ஆர்வத்தை அணி நிர்வாகங்கள் இலங்கை அணி மீது காட்டுவதில்லை. ஆரம்பத்தில் இருந்தே சங்கக்காரா, ஜெயவர்த்தனே, மேத்யூஸ், ஜெயசூர்யா, முரளிதரன் என பலர் ஐபிஎல் ஆடி இருந்தாலும் அதன் பின் பெரிய தாக்கத்தோடு ஐபிஎல்-இல் முத்திரை பதித்தவர்கள் மிக மிக குறைவு. சமீபமாக ஒன்றிரண்டு ஐபிஎல் தொடர்களில்தான் மகிஷா தீக்ஷனா, வணிந்து ஹசரங்கா, ராஜபக்ஷ போன்ற வீரர்கள் மிளிர ஆரம்பித்துள்ளனர்.
தசுன் ஷனகா
பெரும் தலைகள் ஓய்விற்கு பின், இடையில் ஒட்டுமொத்த இலங்கை அணியே ஒரு வீழ்ச்சியில் இருந்தாலும், மீண்டும் அவர்கள் மீண்டு வந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை பின்னுக்கு தள்ளும் அளவு வந்துவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் உருவாக்கிய இளம் வீரர்கள். அதில் குறிப்பிடத்தக்க வீரர்தான் தசுன் ஷனகா. மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடி காட்டும் இவர் இலங்கை அணி வென்ற போட்டிகளில் முக்கிய பங்கு வதிருக்கிறார். இந்தியாவுடன் ஆடிய மூன்றவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து இருந்தார். டி20 போட்டியிலும் தனித்து தெரிந்தார். ஆனால் கடந்த ஐபிஎல் ஏலத்தில் யாருமே அவரை வங்காதது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் தசுன் ஷனகா
ஏனெனில் எல்லா தொடர்களிலும் தனித்து தெரிந்த தசுன் ஷனகா அவரது அதிரடி மூலம் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தருவதில் வல்லவர். அதுமட்டுமின்றி வலது கை மீடியம் பேசரான இவர் மிடில் ஓவர்களில் பந்து வீசி விக்கெட் எடுக்கும் திறனும் கொண்டவர். கிட்டத்தட்ட இலங்கை அணியின் பாண்டியாவாக உருவாகி வந்த அவரை ஐபிஎல் அணிகள் புறக்கணித்தது பலரை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. ஆனால் தற்போது வில்லியம்சனுக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாட உள்ள அவர் ஒரு வழியாக ஐபிஎல் தொடர்களில் கால் பதிக்க உள்ளார். ஏற்கனவே, ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரஷீத் கான் என்று ஒரே ஃபினிஷர்களாக வைத்துள்ள பலமான அணியில் மற்றொரு ஃபினிஷர் இணைந்துள்ளது கூடுதல் பலமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். குஜராத் அணி அவர்களது ஃபினிஷர்கள் உதவியால், இரண்டாவது பேட்டிங் செய்து ஒரே ஒரு போட்டி மட்டுமே தோற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.