இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி இருந்து வந்தார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என முக்கிய கட்டங்களில் கோலியின் கேப்டன்சி சொதப்பிவிடுகிறது. இதன் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார். விராட் கோலியின் இந்த முடிவு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். டி20 போட்டிகளில் இருந்து மட்டுமே கேப்டன் பதவியை துறக்கிறார் கோலி. ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து கேப்டனாக செயலாற்றுவார் என்று கூறப்பட்டிருக்கிறது. டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் தெரிகிறது.



விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். 2013-ம் ஆண்டு முதல் அந்த அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுக்கவில்லை. இதற்கிடையே இந்த ஐ.பி.எல். போட்டியோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். கோப்பையுடன் வெளியேற இருந்த அவரது கனவு தகர்ந்தது. எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றதால் ஐ.பி.எல். கோப்பையை விராட் கோலியால் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பெங்களூர் அணிக்காக தான் கடைசிவரை விளையாடுவேன் என்று அவர் கொல்கத்தாவுடன் மோதிய போட்டிக்கு பிறகு தெரிவித்தார். இந்த நிலையில் பெங்களூர் அணியின் உரிமையாளராக நான் இருந்திருந்தால் விராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க சொல்லி இருப்பேன் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக அவர் கூறியதாவது, "நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேப்டன் பொறுப்பை தொடருமாறு கேட்டிருப்பேன். ஏனென்றால் ஒரு வீரராகவும், ஒரு அணியின் தலைவராகவும் அவரை இருவேறு நபராக நான் பார்க்கிறேன். மிகவும் திறமை வாய்ந்த, வயதில் இளையவரான அவர் எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார். இத்தகைய சூழலில் அவர் வேறொரு வீரரின் கீழ் ஆடுவதை நான் பார்க்க விரும்பவில்லை. கோலி கேப்டனாக இல்லாத பெங்களூர் அணி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அதனால் தான் சொல்கிறேன் நான் உரிமையாளராக இருந்தால் மீண்டும் ஒருமுறை முற்றிலும் மாறுபட்ட அணியை உங்களது (கோலி) தலைமையில் அமைத்து விளையாடுவோம் என்று சொல்வேன். பெங்களூர் அணியில் தற்போது உள்ள வீரர்களில் விராட் கோலி, மேக்ஸ்வெல், படிக்கல் ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்." என்றார்.