சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதியதாக 3 விதிகளை அமலபடுத்துவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்:


உலக நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை நடுநிலைத்தன்மையுடன் நடத்திடவும், துல்லியமான முடிவுகள் மற்றும் போட்டிகளை சுவாரஸ்யமாக்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. அதோடு, காலத்திற்கேற்ப விதிகளை திருத்தியும், மேம்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் தான், புதியதாக 3 விதிகளை அமல்படுத்துவதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.


அம்பயரின் முடிவு அவசியமில்லை:


டிஆர்எஸ் முறையில் கள நடுவரின் முடிவை மறு ஆய்வு செய்யும்போது, வழக்கமாக நடுவர்கள் சாஃப்ட் சிக்னல் எனும் பெயரில் தங்களது முடிவுகளை தெரிவித்து வருகின்றனர். இது நீண்ட நாட்களாகவே கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், இனி கள நடுவரின் முடிவை டிஆர்எஸ் முறையில் மறு ஆய்வு செய்யும்போது நடுவர்கள் சாஃப்ட் சிக்னல் முறையில் தங்களது முடிவை காட்ட வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியானது, அடுத்த மாதம் லண்டனில் இந்தியா - அயர்லாந்து  இடையே நடைபெற உள்ள, டெஸ்ட் போட்டியின் போது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹெல்மெட் கட்டாயம்:


இனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது, பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கீப்பர்கள் ஸ்டம்பிற்கு அருகில் நிற்கும்போதும், பீல்டர்கள் பேட்ஸ்மேன்களுக்கு அருகில் நிற்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு ஏற்படும் அபாயங்களை தவிர்க்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஃப்ரீ ஹிட்டில் ரன்:


இனி ஃப்ரீ ஹிட் பந்தில் ஸ்டம்பின் மீது பட்டு தூர செல்லும் பந்திற்கும் கூட ஓடி ரன் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வகையிலான ஒரு முடிவாக உள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது கூட, ஃப்ரீ ஹிட் பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி போல்டானார். ஆனால், அதில் ரன் ஏதும் ஓடி எடுக்கவில்லை. புதிய நடைமுறையின்படி, அவ்வாறு போல்டானால் கூட இனி ஓடி ரன் எடுக்கலாம்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்:


இந்திய புதிய விதிமுறைகள் அனைத்துமே வரும் ஜுன் மாதம் 7ம் தேதி லண்டனில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளன. இது  கிரிக்கெட் போட்டிகளை மேலும் பாதுகாப்பானதாகவும், துல்லியமானதாகவும் மேம்படுத்தும் என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் விவரங்களை, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சம்மேளனங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.