நேற்றைய தினம் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸின் நிதிஷ் ராணா நடுவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுப்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை - கொல்கத்தா


ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஆட்டமாக சென்னை சேப்பாக்கம், எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை கொல்கத்தா அணி வென்றது. சேசிங்கில் அற்புதமாக ஆடிய ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ராணா அரைசதம் அடித்து அசத்தினர். டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதலில் ஆடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டதால், பெரிய ரன் குவிக்க முடியாமல் திணறினர். சிவம் துபே ஓரளவுக்கு நின்று ஆடி, 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார்.



சரிந்த சென்னை


அவரைத்தவிர டெவோன் கான்வே மட்டுமே 30 ரன்கள் வரை எடுத்தார். கடைசியில் ஜடேஜாவால் அதிரடியாக ஆட முடியாததால், சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. வேகப்பந்து வீச்சாளர் அரோரா வீசிய கடைசி ஓவரில் நோ-பால் வீசினாலும் 9 ரன்கள் மட்டுமே வந்தது. ஃப்ரீ-ஹிட் பந்தில் எம்எஸ் தோனி க்ளீன் போல்டானார். கொல்கத்தா பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி (2/36), சுனில் நரைன் (2/15) தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


தொடர்புடைய செய்திகள்: GT vs SRH IPL 2023: முதல் டீமாக பிளே ஆஃப்பில் அடியெடுத்து வைக்குமா குஜராத்.. ஹைதராபாத்துடன் இன்று மோதல்.. யாருக்கு வெற்றி?


நடுவர்களுடன் வாக்குவாதம்


கடைசி ஓவருக்கு முன்னதாக இந்த போட்டியில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கிரீஸில் சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா நிற்க, வைபவ் அரோரா கடைசி ஓவரை வீசவிருந்தார். ஆனால், கொல்கத்தா அணியின் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக, அதற்காக ஒரு ஃபீல்டரை உள்ளே நிறுத்தும் தண்டனையை அம்பயர்கள் தெரிவித்தனர். புதிய விதிகளின்படி, குறிப்பிடப்பட்ட நேரத்தை தாண்டி சென்றுவிட்டால், ஐந்து பீல்டர்களுக்கு பதிலாக அதிகபட்சமாக நான்கு பீல்டர்களை வட்டத்திற்கு வெளியே வைத்திருக்க வேண்டும். ஆனால் இதை சொன்ன நடுவர்களிடம் ராணா சண்டை போட சென்றுவிட்டார்.






வெற்றி பெற்ற கொல்கத்தா


ராணா அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வீடியோ காட்சிகள் மூலம் தெரிந்தது. இருப்பினும் ஒரு ஃபீல்டரை உள்ளே வைத்து ஆடும் முடிவே கடைசியில் எடுக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 145 ரன்களை பின்தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 33 ரன்கள் என்று இருந்த கொல்கத்தா அணியை, தீபக் சாஹர் அலறவிட்டார். அப்போது 3 விக்கெட்டுகளையுமே அவர்தான் கைப்பற்றியிருந்தார். அதன் பின் வந்த ரிங்கு சிங் (43 பந்துகளில் 54) மற்றும் ராணா (44 பந்தில் 57 ரன்) நான்காவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியை மீது வெற்றிக்கு இழுத்து சென்றனர். இறுதியில் அந்த அணி 18.3 ஓவரில் இலக்கை அடைந்தது.


இந்நிலையில், ஸ்லோ ஓவர் ரேட் செய்ததற்காக நிதிஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ப்ளேயிங் லெவனில் உள்ள வீரர்கள் மற்றும் இம்பேக்ட் ப்ளேயர் உட்பட அனைவருக்கும் ரூ. 6 லட்சம் அல்லது விளையாட்டு தொகையில் 25 சதவிகிதம் சம்பளத்தில் எது குறைவோ அதை அபராதமாக கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.