சென்னை அணி கடைசியாக ராஜஸ்தான் அணியுடன் மோதியது, அதில் 203 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 32 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியை தழுவ, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு சறுக்கியது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரண்மாக கூறி விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட்டானது பலரால் விமர்சிக்கப்பட்டது. 


விமர்சித்த கவாஸ்கர்


ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனதை, கமெண்ட்ரியிலேயே முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார். அவர்,"பீல்டிங் செய்ய வேண்டும். நேரடியாக பேட்டிங் செய்ய வெளியே வந்தால் உங்களால் பந்தை அடிக்க முடியாது. ப்ரித்வி ஷாவும் பீல்டிங் செய்யாமல் நேரடியாக பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கும் இந்த தொடரில் ரன் கிடைக்கவில்லை. அந்த அணிக்கு வெற்றியும் கிடைக்கவில்லை என்பதை பார்த்தோம். தற்போது ராயுடுவும் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆகியுள்ளார், "என விமர்சித்து இருந்தார்.






ராயுடுவின் ட்விட்டர் நக்கல்கள்


ராயுடு பொதுவாகவே ட்விட்டரில் நாசூக்காக ட்வீட் செய்து பதிலடி கொடுப்பதில் வல்லவர். உலகக்கோப்பையில் இவருக்கு பதிலாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று மூன்று பகுதியிலும் பயனுள்ள '3D (3டைமன்ஷன்)' வீரராக இருப்பார் என்று விஜய் சங்கரை தேர்வு செய்தபோது ராயுடு இந்த உலகக்கோப்பையை பார்க்க 3டி க்ளாசஸ் வாங்க போகிறேன் என்று ட்வீட் செய்து அதகளம் செய்தார். இந்நிலையில் கடைசி போட்டிக்கு பின் ராயுடு பொதுவாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Rayudu On Gavaskar: சிஎஸ்கே வீரருக்கும் கவாஸ்கருக்கும் மோதல்.. ஐபிஎல் இம்பேக்ட் பிளேயர் விதியால் வெடித்த பிரச்னை


கவாஸ்கருக்கு பதிலடியா?


அவர் வெளியிட்ட ட்வீட் கவாஸ்கர் விமர்சனத்திற்கு ராயுடு தந்த பதிலடி என்று கூறப்பட்டு வைரலாகி வருகிறது. அதில்,  ”வாழ்க்கையிலும் விளையாட்டிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். நாம்தான் பாசிட்டிவாக இருக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான் பிரச்சனைகள் விலகும். முடிவுகள் எப்போதும் நம் முயற்சிகளுக்கான வெளிப்படாக இருக்காது. எப்பொழுதும் சிரித்துக் கொண்டே செயலில் ஈடுபடுங்கள்” என ராயுடு குறிப்பிட்டார். இந்த பதிவு கவாஸ்கரின் விமர்சனத்திற்கான ராயுடுவின் பதில் என்று ரசிகர்கள் கூறிய நிலையில் மேலும் ஒரு டீவீட்டை ராயுடு வெளியிட்டுள்ளார்..






மீண்டும் பதில் தந்த ராயுடு


கவாஸ்கரின் "ஃபீல்டிங் இல்லை என்றால், ரன் இல்லை" என்ற கருத்துகளுடன் ராயுடுவின் ட்வீட் தொடர்பான அறிக்கைகளுக்குப் பிறகு, ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னொரு ட்வீட் வெளியிட்டிருந்தார், "என்ன முட்டாள்தனம்... தி கிரேட் மிஸ்டர் கவாஸ்கரின் கருத்துக்களுக்கும் எனது ட்வீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. அவரது கருத்துக்கள் நன்கு மதிக்கப்படுகின்றன. எனது பீல்டிங்கைப் பொறுத்தவரை, ஒரு வீரர் அவர் களமிறங்க வேண்டுமா இல்லையா என்பதை அவர் முடிவு செய்வதில்லை," என்று அவர் எழுதியிருந்தார். இந்த ட்வீட் ஊகங்களை மறுப்பதாக இருந்தாலும் இதிலும் தென்படும் வஞ்சப்புகழ்ச்சி தொனி நம்மை சிந்திக்காமல் இருக்க விடவில்லைதான். கடைசி வரியில் மீண்டும் கவாஸ்கரை தாக்கியது போலத்தான் தெரிகிறது என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.