ஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கும், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கவாஸ்கருக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. அதன்படி, தனது பேட்டிங்கை விமரிசித்த சுனில் கவாஸ்கருக்கு அவர் மறைமுகமாக பதிலடி தந்துள்ளார்.


சென்னை - ராஜஸ்தான் மோதல்:


ஐபிஎல் தொடரில் அண்மையில் நடந்து முடிந்த லீக் போட்டியில்  சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் 203 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 32 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு சறுக்கியுள்ளது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரண்மாக கருதப்படுகிறது. குறிப்பாக இம்பேக் பிளேயராக களமிறங்கிய அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட்டானார்.


கவாஸ்கர் விமர்சனம்:


ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனதை, கமெண்ட்ரி பாக்ஸில் இருந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார். அதன்படி,  நீங்கள் பீல்டிங் செய்ய வேண்டும். நேரடியாக பேட்டிங் செய்ய வெளியே வந்தால் உங்களால் பந்தை அடிக்கத் தொடங்க முடியாது. ப்ரித்வி ஷாவும் பீல்டிங் செய்யாமல் நேரடியாக பேட்டிங் செய்ய  இதில் அவருக்கு ரன்னும் கிடைக்கவில்லை. அணிக்கு வெற்றியும் கிடைக்கவில்லை. அதை நாங்கள் பார்த்தோம். தற்போது ராயுடுவும் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆகியுள்ளார்" என விமர்சித்து இருந்தார்.


ராயுடு மறைமுக பதில்:


இந்நிலையில் கவாஸ்கரின் விமர்சனத்திற்கு டிவிட்டர் பக்கத்தில் ராயுடு மறைமுக பதிலடி தந்துள்ளார். அதில்,  ”வாழ்க்கையிலும் விளையாட்டிலும் ஏற்ற தாழ்வுகள் ஒரு நிலையான பகுதியாகும். நாம் நேர்மறையாக இருக்க வேண்டும் மற்றும் கடினமாக உழைக்க வேண்டும் அப்போது தான் விஷயங்கள் மாறும். முடிவுகள் எப்போதும் நம் முயற்சிகளுக்கான வெளிப்படாகா இருக்காது. எனவே எப்பொழுதும் சிரித்துக் கொண்டே செயலில் ஈடுபடுங்கள்” என ராயுடு குறிப்பிட்டுள்ளார். இது கவாஸ்கரின் விமர்சனத்திற்கான ராயுடுவின் பதிலாகவே கருதப்படுகிறது.


நடப்பு தொடரில் ராயுடு:


நடப்பு தொடரில் சென்னை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7 போட்டிகளில் ராயுடு பேட்டிங் செய்துள்ளார். குறிப்பாக சென்னை அணி இலக்கை துரத்தும் போட்டிகளில் அவர் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கியுள்ளார். ஆனால், அதில் ஒருமுறை கூட ராயுடு 30 ரன்களை கூட எட்டியதில்லை. இந்த தொடரில் அவர் மொத்தமாகவே ஒரு டக்-அவுட் உட்பட 73 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோரே லக்னோ அணிக்கு எதிராக சேர்த்த 27 ரன்கள் தான். நடப்பு தொடரில் தற்போதைய நிலவரப்படி சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.