சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத்துக்கு எதிராக த்ரில் வெற்றியைப் பதிவு செய்ய, அந்த ஓவரை வீசிய மோஹித் ஷர்மா எப்படி உணர்ந்தார் என்பதை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.


திரில்லிங் வெற்றி பெற்ற சென்னை அணி


குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, கடைசி ஓவரை தனது நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளரான, ஃபார்மில் உள்ள மோகித் சர்மாவுக்காகவும் வைத்திருந்தார். அனுபவமிக்க வீரரான அவர் கடந்த சீசனில் சிறப்பாக அதனை செய்திருந்தார். 2015-ஆம் ஆண்டில் இந்தியாவின் 50 ஓவர் உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருந்த வேகப்பந்து வீச்சாளரான மோஹித் சர்மா, பின்னர் ஃபார்ம் இழந்து, குஜராத் அணிக்கு நெட் பவுலராக வந்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கிய பெரும் போராட்டக் கதை ஒன்று இதன் பின் உள்ளது அனுபவமும் மன உறுதியும் உள்ள ஒருவரால் மட்டுமே இந்த கடைசி நிமிட அழுத்தத்தை தாங்கி பந்து வீச முடியும். ஆனாலும் அவர் நினைத்தவை நடக்காத நிலையில் அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை விவரித்தார்.



யார்கர்களே ஒரே திட்டம்


அந்த தருணங்களை நினைவு கூர்ந்த மோஹித் சர்மா. “நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தது. நெட்களில், இதுபோன்ற சூழ்நிலைகளை நான் பயிற்சி செய்திருக்கிறேன், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழலில் நான் இருந்திருக்கிறேன். அதனால் நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீச வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டேன்," என்று கூறினார். அவர் தான் திட்டமிட்டதை போலவே பந்து வீசினார். முதல் நான்கு பந்துகளில் சிஎஸ்கே அணியால் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதில் ஒரு முக்கியமான டாட் பால் இருந்தது. கடைசி இரண்டு பந்துகளில் பத்து ரன்கள் தேவை என்ற நிலையில், குஜராத் டைட்டன்ஸ் பாண்டியா மற்றும் அணி ஊழியர்கள் அவரிடம் பேசினர். மோஹித் அங்கு என்ன பேசினார்கள் என்பது குறித்து, “என் திட்டம் என்ன என்பதை அவர்கள் அறிய விரும்பினர். மீண்டும் யார்க்கர் வீச முயற்சிப்பேன் என்று கூறினேன். இந்த நேரத்தில் எல்லோரும் எல்லாம் சொல்வார்கள், ஆனால் எதிலும் பிரயோஜனம் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்," என்றார்.


தொடர்புடைய செய்திகள்: CSK: தி.நகர் திருப்பதி கோயிலில் ஐ.பி.எல். கோப்பையுடன் சி.எஸ்.கே நிர்வாக குழு சிறப்பு பூஜை!


கடைசி இரண்டு பந்து மிஸ் ஆனது


மோஹித் சர்மா, கடைசி பந்தை கால் விரல்களுக்கு அருகில் வீச முயற்சித்தேன் என்றார். “நான் மீண்டும் யார்க்கர் பந்து வீச முயற்சித்தேன். ஐபிஎல் முழுவதிலும் நான் அதை செய்துள்ளேன். ஆனால் இம்முறை பந்து நான் குறிவைக்காத இடத்தில் விழுந்தது, ஜடேஜாவிற்கு அடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் முயற்சித்தேன், என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், ”என்று அவர் கூறுகிறார். சென்னை அணி வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்க, மோஹித் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று ஒரு மூலையில் அமர்ந்தார். குஜராத்தின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா வந்து, அவர் நன்றாக பந்து வீசினார் செய்தார், முடிவு நம் கையில் இல்லை என்பதை அவருக்குப் புரிய வைத்தார். 






என்னால் தூங்க முடியவில்லை


மேலும் பேசிய மோஹித், “என்னால் தூங்க முடியவில்லை. போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். நான் இந்த பந்தை அப்படி வீசியிருக்கலாம், அல்லது இப்படி வீசியிருக்கலாம் என்றெல்லாம் இப்போது தோன்றுகிறது. உணர்வுகள் மோசமாக உள்ளது. எங்கோ ஏதோ தவறாகிவிட்டது, ஆனால் நான் இதிலிருந்து முன்னேற முயற்சிக்கிறேன்," என்று கூறுகிறார்.


ஐபிஎல் தொடரில் தனது பயணத்தை மேலும் விவரித்து. "நான் அதிசயிக்கத்தக்க வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சீசனுக்கு முன் அனி பாயிடம் (அனிருத் சவுத்ரி, மூத்த ஹரியானா நிர்வாகி) பேசியது எனக்கு நினைவிருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். நான் மீண்டும் விளையாட முயற்சிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நான் எந்த எதிர்பார்ப்புமின்றி வந்திருந்தேன், தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன். எனது பணி நெறிமுறை அப்படியே உள்ளது. முன்னால் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனது பயணத்தை நான் ரசிக்கிறேன், ”என்கிறார் மோஹித் சர்மா.