ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் 5வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் எம்.எஸ். தோனி தலைமையிலான அணி தற்போது மும்பை இந்தியன்ஸுடன் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக வலம் வருகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா 5 முறை கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் குறித்து தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் 2023 சீசன் முழுவதும் 41 வயதான தோனி முழங்கால் காயத்துடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடி அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து ஐபிஎல் சீசன் தொடக்கத்திலேயே பேசிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், “ சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டு வருவது உண்மைதான். அவரது நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த காயத்தினால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலக வாய்ப்பில்லை “ என தெரிவித்தார்.
இதையடுத்து, எம்.எஸ். தோனி போட்டியின்போதோ அல்லது பயிற்சியின்போதோ நொண்டியடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தி கலங்க செய்தது. மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் ஆடியது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தாலும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை வீரர்கள் மைதானம் முழுவதும் சுற்றி வந்து பரிசு பொருட்களை வழங்கினர். அந்த நிகழ்வில் எம்.எஸ்.தோனி தனது முழங்கால் பகுதியில் கட்டுபோட்டு நடந்தது பார்ப்போரை கண் கலங்க செய்தது.
இந்த நிலையில், எம்.எஸ்தோனி இந்த வாரம் மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் மருத்துவனையில் அனுமதிக்கப்படுவார் என்றும், அவரது முழங்கால் காயத்தின் அளவை சரிபார்க்க சோதனைகள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. (ரிஷப் பண்ட்க்கு விபத்து நடந்தபோது கோகிலாபென் மருத்துவனையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது)
இந்த காயத்தின் நிலைமையை பொறுத்தே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரியவரும்.
நான் ஓய்வை அறிவிக்க இதுவே சிறந்த நேரம் : எம்எஸ் தோனி
கோப்பையை வென்றதற்கு பிறகு பேசிய தோனி, “ தற்போதைய சூழ்நிலையை பார்த்தால், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற இதுவே சிறந்த நேரம். ஆனால் இந்த ஆண்டு ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடலாம் என இருக்கிறேன். அனைவருக்கு நன்றி என்று கூறிவிட்டு விலகிவிடுவது எளிது; ஆனால் அது மனதுக்கு கடினமானதாக இருக்கும். அதே நேரத்தில் வரும் 9 மாதங்களில் கடினமாக உழைத்து ரசிகர்களுக்காக அடுத்த சீசன் விளையாட முயற்சிப்பது தான் அவர்கள் எனக்கு கொடுக்கும் அன்புக்கு நான் செய்வதாக இருக்கும். அது ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசாக இருக்கும்; ஆனால் அது உடலுக்கு எளிதாக இருக்காது” என தெரிவித்தார்.