சேவாகுக்கு பந்து வீசுவது எனக்கு எப்போதுமே கடினமாக இருந்தது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்பின்னர் சுனில் நரைன் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அடியெடுத்து வைத்ததில் இருந்தே சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். அந்த அணியின் முக்கிய வீரராக அவர் கருதப்படுகிறார். அவருடைய சுழற்பந்து வீச்சுக்கு அஞ்சாத வீரர் இருக்க முடியாது. அதுதான் அவரின் பலம்.


2012ல் ஐபிஎல் போட்டிகளில் இணைந்தார் சுனில் நரைன். இப்போது 10 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டார். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 150வது போட்டியை விளையாடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அந்தப் போட்டி அமைந்தது.


மேற்கு இந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த சுனில் நரைன் தனது விளையாட்டு பற்றியும், கள அனுபவம் பற்றியும் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்


ஐபிஎல் போட்டிகளிலேயே நான் எதிர்கொண்ட வீரர்களில் வீரேந்திர சேவாக் தான் பெஸ்ட் என்பேன். அவருடன் விளையாடுவது தான் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நிலவரம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவர் களத்தில் நின்றாடுவார். நான் வீசிய பந்துகளை அவர் துவம்சம் செய்துள்ளார் என்றார் நரைன்.
ஐபிஎல் 2022 வை பொறுத்தவரை இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இவர் தான் எகானமி பவுலராக உள்ளார். இவரது எகானமி ரேட் 5.00 ஆக உள்ளது. 6 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 21 ரன்களில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியது தான் இவருடைய பெஸ்ட்டாக உள்ளது. 




இந்நிலையில் களத்தில் தனது டெக்னிக் பற்றி பேசிய சுனில் நரைன், நான் ஒரு மோசமான பந்தை வீசி அது சிக்ஸரை பேட்ஸ்மேனுக்குப் பெற்றுத் தந்தால் அடுத்த முறை அவர் அடிக்கமுடியாதபடி நல்ல பந்தை நான் வீச வேண்டும். ஒரு வேளை நான் நல்ல பந்தை வீசியும் அவர் சிக்ஸர் அடித்துவிட்டால் என்ன செய்வது? அதிகம் யோசிக்கக் கூடாது என்று அடுத்த நகர்வுக்கு செல்வேன். ஏனெனில் எந்த பேட்ஸ்மேனும் எல்லா பந்துகளையும் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக எதிர்கொள்ள முடியாது. அப்போது பெரிதாக யோசிக்காமல் சின்ன நுட்பத்தை ஃபாலோ செய்வேன். சிம்பிளாக பந்து வீசுவேன். அது மேஜிக் செய்யும் என்று கூறியுள்ளார்.


சுனில் நரைன் 10 ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடுவதை மிகவும் ரசிப்பதாக, மனதுக்கு நெருக்கமானதாக போற்றுவதாகவும் கூறியுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நான் விளையாடுவேன் என நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர், "ஆம் இதை நான் வெங்கியிடம் அடிக்கடி கூறியுள்ளேன். (வெங்கி.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ) அடிக்கடி கூறியுள்ளேன். நான் எப்போதுமே கேகேஆரில் எனது இருப்பை ரசிக்கிறேன். அதனால் இங்கு ஆரம்பித்ததை இங்கேயே முடிக்க விரும்புகிறேன். அதுவே பெரிய சாதனை என நான் நினைக்கிறேன். நிறைய வெளிநாட்டு வீரர்களால் ஒரே அணியில் தொடர்ச்சியாக தாக்குப்பிடிக்க முடிவதில்லை. ஆனால், நான் தாக்குப்பிடிக்கிறேன். நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி. இந்த அதிர்ஷ்டம் எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன்"  என்று கூறியுள்ளார்.