ஐபிஎல் தொடரில் சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியை நேரில் காண, ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.


16வது ஐபிஎல் சீசன்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க, 70 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் அணிகள் தங்களது உள்ளூர் மைதானங்களில் விளையாடை வருவதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதோடு, மைதானத்திற்கு சென்று போட்டியை நேரில் காணவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


குறிப்பாக 2019ம் ஆண்டிற்குப் பிறகு சென்னை அணி தற்போது தான், உள்ளூர் மைதானத்தில் விளையாடி வருகிறது. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, நடப்பாண்டில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வரும் 12ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகள் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைனில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி?


போட்டிகளுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய பேடிஎம் இன்சைடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே ரசிகர்கள் அணுக வேண்டும்.  பேடிஎம் இன்சைடருக்கான இணைய முகவரியை, ஐபிஎல் அணிகளின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலும் ரசிகர்கள் பெறலாம்.


ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி? 


படி-1: ஐபிஎல் தொடரின் போட்டிகளை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளை எளிமையாக முன்பதிவு செய்ய முதலில் அணுக வேண்டியது பேடிம் இன்சைடர் இணைய முகவரியை தான். அல்லது https://www.iplticket.co.in எனும் முகவரி அணுகலாம்


படி- 2: குறிப்பிட்ட இணைய முகவரிக்குள் சென்ற உடனேயே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளின் விவரங்களும் அவற்றின் லோகோக்களுடன் வழங்கப்பட்டு இருக்கும்.


படி - 3: தற்போது சென்னை அணியின் லோகோ மீது கிளிக் செய்ய வேண்டும். அப்போது சென்னை அணி விளையாட உள்ள போட்டிகளின் விவரங்கள் காண்பிக்கப்படும்


படி - 4: தற்போது 12ம் தேதி நடைபெற உள்ள போட்டியை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் நேரத்தை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அதைதொடர்ந்து, உங்களது வசதிக்கேற்ப டிக்கெட்டை தேர்வு செய்து, UPI மற்றும் நெட் பேங்கிங் மூலம் பணத்தை செலுத்தி உங்களுக்கான டிக்கெட்டை வாங்கிக்கொள்ளுங்கள். பின்பு போட்டி நாளன்று மைதானத்திற்கு சென்று, போட்டியை நேரில் கண்டுகளிக்கலாம்.


நடப்பு தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள தோனி தலைமையிலான சென்னை அணி, ஒரு போட்டியில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளது.