ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் கோப்பைக்காக களமிறங்கியுள்ளன. கொரோனா காலமாக உள்ளூர் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் இந்த ஐபிஎல் திருவிழாவை கோலகலமாக்கி வருகின்றனர்.
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து இருப்பது இதுதான் முதல் முறை. இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் டாஸ் வென்ற அணி பந்து தான் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிரட்டும் லக்னோ
லக்னோ அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் சென்னை அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக விளங்கும் அந்த அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஹைதரபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடன் 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. உள்ளூர் மைதானத்தில் அந்த அணி தோல்வியடைந்தது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக மாறி விட்டது. இதனால் தனது முதல் வெற்றியை பெற அந்த அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் லீக் போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. கடந்தாண்டு நடந்த அந்த போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மைதானம் ஒரு பார்வை
லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 6 டி20 போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே விரும்பும். அதேபோல் இம்மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இம்மைதானத்தில் மொத்தம் எடுக்கப்பட்ட 70 விக்கெட்டுகளில் 51 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்களால் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஹைதராபாத் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டும் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங்(விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன் ), ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
ஹென்ரிச் கிளாசென், ஃபசல்ஹக் ஃபரூக்கி, மயங்க் மார்கண்டே, மயங்க் டாகர், மார்கோ ஜான்சன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன்
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னாய்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
ஆயுஷ் படோனி, ஸ்வப்னில் சிங், டேனியல் சாம்ஸ், பிரேரக் மங்காட், அவேஷ் கான்