ஐபிஎல் போட்டித் தொடரின் 16வது சீசன் மிகவும் பிரமாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேப்டன் கூல் எனப்படும் மகேந்திரசிங் தோனி தலைமையில் நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட களமிறங்கியுள்ளன.
இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை ருத்ராஜ் கெயிக்வாட்டும், கான்வேவும் தொடங்கினர். இந்த சீசனின் முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். சென்னை அணி நிதானமாக விளையாடியது, மூன்றாவது ஓவரில் கான்வே முகமது ஷமி பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய, மொயின் அலி கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விளாசியது மட்டும் இல்லாமல், ருத்ராஜுடன் சிறப்பான பார்ட்னர் ஷிப்பை கட்டமைத்து வந்தார். ஆனால் இந்த கூட்டணியை பவர்ப்ளேவின் கடைசி ஓவரை வீசிய, ரஷித் கான் பிரித்தார். அதன் பின்னர் களமிறங்கி நிதானமாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸும் ரஷித் கான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். ஐபிஎல் வரலாற்றில் ரஷித் கான் பந்து வீச்சில் ஸ்டோக்ஸ் தனது விக்கெட்டை இழப்பது இது மூன்றாவது முறையாகும்.
ருத்ராஜ் ருத்ரதாண்டவம்
அதன் பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு ருத்ராஜ்க்கு சிறப்பாக ஒத்துழைக்க, ஆட்டம் அதிரடியாக மாறியது. இருவரும் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டதோடு மைதானம் முழுவதும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினர். ருத்ரதாண்டவமாடி வந்த ருத்ராஜ் கெய்க்வாட் 23 பந்தில் அரைசதம் விளாசினார். சென்னை அணி 11 ஓவர்களில் 100 ரன்களை எட்டி அசத்தியது. இந்த ஜோடி சிறப்பாக விளையாடி, 30 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த நிலையில், அம்பத்தி ராயுடு ஜோஸ்வா லிட்டில் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் ரன்ரேட் சற்று குறைய, 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்தது.
ஜோசப் செக்
கடைசி 5 ஓவர்களிலும் சிறப்பாக ரன்கள் சேர்க்க ருத்ராஜ் அடித்து விளையாடினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ருத்ராஜ் கெயிக்வாட் 50 பந்தில் 92 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை 18வது ஓவரை வீசிய ஜோசப்பிடம் பறிகொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய ஜடேஜா ஒரு ரன் மட்டும் எடுத்த நிலையில் அதே ஓவரில் வெளியேற போட்டியின் இறுதி பக்கங்கள் குஜராத் வசம் சென்றது. அதன் பின்னர் தோனி களமிறங்கி இறுதி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாச, இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணி சார்பில் ரஷித் கான், ஜோசப் மற்றும் முகமது ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.