GT Tweet for Dhoni:  16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து தோனியை பாராட்டி குஜராத்  அணி ட்வீட் செய்துள்ளது. 


சென்னை சாம்பியன்:


இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 214 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரின் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து 4 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது தொடங்கிய கனமழை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்ததால், போட்டி நிறுத்தப்பட்டது. 


அதன் பின்னர், 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால்  பின்னர் 13வது ஓவரை வீசிய மோகித் சர்மா அந்த ஓவரில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி விட்டுக்கொடுத்து, ராயுடு மற்றும் தோனியின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றினார். இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி டக் அவுட் ஆகி வெளியேறினார். இது ரசிகர்களுக்கு எப்படி ஏமாற்றமாக இருந்ததோ, அதைவிட தோனிக்கு இருந்தது. ஆடுகளத்தைவிட்டு வெளியேறிய தோனி, தனது அணியுடன் போய் அமர்ந்து கொண்டு யாரிடமும் பேசாமல் மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். அவரிடம் மற்ற சென்னை வீரர்கள் பேசவுமில்லை.


தோனி ரசிகராக மகிழ்ச்சி:


அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால், போட்டி குஜராத் கரங்களுக்குச் சென்றது. இறுதி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்து டாட் பாலாக  வீசிய மோகித் சர்மா, அடுத்த மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் விட்டுக்கொடுக்க, போட்டியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.   கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த இரண்டு பந்துகளையும் எதிர்கொண்ட ஜடேஜா, முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால்  சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 






இந்த போட்டிக்குப் பின்னர் குஜராத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களுக்குத் தெரியும் தோனி. நாங்கள் ஒரு ஜீனியசுக்கு எதிராக மட்டும் விளையாடவில்லை. நாங்கள் ஒரு மஞ்சள் கடலுக்கு எதிராக விளையாடுகிறோம். இந்த போட்டியின் முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்ககூடியதாக இருந்தாலும், ஐபிஎல் கோப்பை உங்களிடம் இருப்பதைப் பார்க்கும் போது எங்களுக்குள் இருக்கு தோனி ரசிகன் மிகவும் மகிழ்கிறான்” என பொருள்படுவது போன்று ட்வீட் செய்துள்ளது.