நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி, சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.


பரபரப்பான இறுதிப்போட்டி:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 214 ரன்களை குவித்தது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால், சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, கடைசி ஓவர்களில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்று, 5வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனிடையே, இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.


01. மும்பையின் சாதனையை ஈடு செய்த சென்னை:


நேற்றைய இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 5வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்துள்ளது.


02. தோனி அசத்தல்:


குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில்லை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், டி-20 போட்டிகளில் 300 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதில் ஐபிஎல் தொடரில் மட்டும் 138 கேட்ச்கள் மற்றும் 42 ஸ்டம்பிங் விக்கெட்டுகள் அடங்கும்.


03. சுப்மன் கில் அபாரம்:


ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில், ஜோஸ் பட்லரை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 973 ரன்களுடன் கோலி முதலிடத்திலும், கில் (890 ரன்கள்) மற்றும் பட்லர் (851 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


04. சாய் சுதர்ஷன் மிரட்டல்:


சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்துள்ளார் தமிழக வீரர் சாய் சுதர்ஷன். அதன்படி, ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள், என்ற 11 வருட சாதனையை சாய் சுதர்ஷன் தகர்த்துள்ளார். இதன் மூலம் பிஸ்லாவின் சாதனையை தகர்த்துள்ளார். அதோடு, ஐபிஎல் இறுதிப்போட்டியில் இளம் வயதில் (21 வருடம் 226 நாட்கள்) அரைசதம் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


05. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அதிக ரன்கள்:


ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், மும்பை வீரர் ரோகித் சர்மாவை (183) பின்னுக்குத் தள்ளி குஜராத் வீரர் சாஹா (184) 3வது இடத்தை பிடித்துள்ளார்.


06.இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர்:


நேற்றைய போட்டியில் குஜராத் அணி எடுத்த 214 ரன்கள் தான் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக ஐதராபாத் எடுத்து இருந்த 208 ரன்கள் என்ற சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.


07. அதிகபட்ச பார்வையாளர்கள்:


நேற்றைய போட்டியில் முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை மட்டும் ஜியோ செயலியில் 3.2 கோடி பேர் பார்த்து ரசித்தனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் டிஜிட்டல் தளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற போட்டி என்ற பெருமையை இந்த இறுதிப்போட்டி பெற்றுள்ளது.