CM Stalin Wish CSK: 16வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நேற்று வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. மழையால் ஆட்டம் தடைபட்டு போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற சூழல் உருவாகி ஒருவழியாக, டக்வொர்த் லூயிஸ் விதிப்படி சென்னை அணி வெற்றி பெற 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 


சாம்பியனான சென்னை:


12 ஓவர்களில் சென்னை அணி 3  விக்கெட்டுகளை இழந்து, 133 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதன் பின்னர் 13வது ஓவரை வீசிய மோகித் சர்மா அந்த ஓவரில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி விட்டுக்கொடுத்து, ராயுடு மற்றும் தோனியின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றினார். இதனால் போட்டி குஜராத் கரங்களுக்குச் சென்றது.


இறுதி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்து டாட் பாலாக  வீசிய மோகித் சர்மா, அடுத்த மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் விட்டுக்கொடுக்க,  கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த இரண்டு பந்துகளையும் எதிர்கொண்ட ஜடேஜா, முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால்  சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஐபிஎல் தொடரில் 5வது கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் மும்பை அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. 


சென்னை அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சில மேடைகளில் தானும் சென்னை அணியின், தோனி ரசிகர் தான் எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை அணியின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், ”ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு திட்டத்துடன் இருக்கும் தோனியின் தலைமையின் கீழ் சென்னை அணி தனது 5வது கோப்பையை வென்றுள்ளது. அதற்கு சென்னை அணியை வாழ்த்துகிறேன். தொடர்ந்து துயரங்களைச் சந்தித்த பின்னரும் சென்னை அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்த ஜடேஜாவுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.