ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் தொடர்பான பதிவுகள், சமூக வலைதளங்களில் அதிகம் உலா வருவது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
சுப்மன் கில் அபாரம்:
குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில், நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் உட்பட 851 ரன்களை விளாசியுள்ளார். குறிப்பாக நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் போட்டியில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 60 பந்துகளில் 129 ரன்களை குவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவும் மீம்ஸ்:
பொதுவாக சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பாராட்டியும், சொதப்பிய வீரர்களை விமர்சித்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்குவது வழக்கமான ஒன்று தான். ஒரு வீரருக்காக தங்களது நேரத்தை செலவிட்டு போட்டியை ரசிக்கும் ஒரு ரசிகன், அந்த வீரரை தாராளமாக பாராட்டலாம், விமர்சிக்கலாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த வகையில் தான், சுப்மன் கில்லின் அபார ஆட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தாக்கப்படும் சச்சின் குடும்பம்:
ஆனால், கில்லை பாராட்டுவதாக கூறி சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் மீம்ஸ்கள் அத்துமீறி உள்ளன என்பதே உண்மை. குறிப்பாக கில் ஒவ்வொரு முறை சிறப்பாக செயல்படும்போதும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், அவரது மகள் சாரா மற்றும் மகன் அர்ஜுன் ஆகியோர் அதிகளவில் விமர்சிக்கப்படுகின்றனர். குறிப்பாக சச்சினை மாமனாராகவும், அவரது மகளை கில் திருமணம் செய்து கொண்டதை போன்று குறிப்பிட்டும், சச்சினின் குடும்பத்தை கில் வச்சு செய்வது போன்றும் அதிகப்படியான மீம்ஸ்கள் உலா வருகின்றன. ஒரு முறை, இரண்டு முறை அல்ல, கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு முறையும் இது தொடர்கிறது.
காரணம் என்ன?
சச்சின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. சமூக வலைதளங்களில் அவ்வப்போது அவர்கள் வெளியிடும் பதிவுகளும் அதை உணர்த்தும் விதமாக தான் இருந்தன. ஆனால், அதுதொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே, சாரா டெண்டுல்கரை விட்டு பிரிந்து தற்போது பாலிவுட் நடிகை சாரா அலிகானை கில் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. பேட்டி ஒன்றில் இதுகுறித்து கேட்டபோதும், இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என கில் மழுப்பலாக பதிலளித்து இருந்தார். இந்த சூழலில் தான் கில் - சாரா டெண்டுல்கர் தொடர்பான பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
என்ன மாதிரியான மனநிலை?
இந்திய அணிக்கான வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக சுப்மன் கில் இருந்து வருகிறார். அவரது ஆட்டம் குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதிப்பது எந்த வகையில் சரியாகும். அதுவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளாக வெளிவந்த சில தகவல்களை வைத்தே இப்படி மீம்ஸ்களை உருவாக்கி பொழுதுபோக்குவது அவசியமா?.. நம் வீட்டு பெண்கள் என்றால் மட்டும் கண்ணும் கருத்தமாக பாதுகாக்க வேண்டும் என ஏக வசனம் பேசி, சினிமாக்களில் வரும் வசனங்களை எல்லாம் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ்களை ரயில்களாக ஓட விடுகிறோம். ஏன், ஒரு பிரபலமானாவர்களின் குடும்ப பெண்ணை பற்றி பேசும்போது மட்டும் அந்த எண்ண ஓட்டங்கள் சராசரி மனிதர்களாகிய நம்மிடம் இருந்து தூர விலகிவிடுகிறது என்பது தான் இங்கு கேள்வியே?. என்னதான் சச்சின் ஒரு கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்தாலும், அடிப்படையில் அவரும் ஒரு தந்தை தான். எந்த தந்தையும் தனது மகள் குறித்து வெளியாகும் அநாவசிய செய்திகளை விரும்பமாட்டார் அல்லவா?...