இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஆட்டம் பல ட்விஸ்ட்டுகளையும் திருப்பங்களையும் கண்டது. டேவிட் வார்னர் மற்றும் அக்சர் படேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதங்களைக் கடந்தாலும், அணியில் வேறு யாருமே சோபிக்காததால், அணியால் நல்ல பேட்டிங் பிட்சில் 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும் இதனை சேஸ் செய்த மும்பை அணி தொடக்க வீரர்கள் திடமான தொடக்கத்தை தந்தனர். ரோஹித் ஷர்மா நிலையாக ஆடி அணியை வழிநடத்தி சென்றார். 



மிடில் ஆர்டர் சொதப்பல்


ரோகித் 45 பந்துகளுக்கு 65 ரன்களும், இஷான் கிஷன் 26 பந்துகளுக்கு 31 ரன்களும், திலக் வர்மா 29 பந்துகளில் 41 ரன்களும் அடித்து நல்ல நிலையில் இருந்தாலும், பின்னர் சிறு தடுமாற்றம் ஏற்பட்டு ஆட்டம் த்ரில்லிங் ஆனது. தட்டுத்தடுமாறி க்ரீனும், டிம் டேவிட்டும் ஒருவழியாக ஆட்டத்தை வென்று தந்தனர். வழக்கம்போல மிடில் ஆர்டர் சொதப்ப சூர்யகுமார் யாதவ் காரணமாக இருக்க, ஆட்டம் டெல்லி பக்கம் திரும்பியது. கடந்த ஆண்டு ஃபார்மின் உச்சக்கட்டத்தை அடைந்த அவர் போட்டிக்கு போட்டி அரைசதங்களை  குவித்துக்கொண்டிருந்த அவர் கடந்த சில மாதங்களாக கடுமையாக சொதப்பி வருவது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: IPL Points Table: முதல் வெற்றியை முத்தமிட்ட மும்பை.. புள்ளி பட்டியலில் முன்னேற்றம்.. யார் முதலிடம்?


ஃபீல்டிங்கின்போது காயம்


இந்திய அணிக்காக டெஸ்ட் ஆடியது முதல், ஒருநாள் போட்டிகள் வரை தொடர்ந்து சொதப்பிய அவர் ஐபிஎல் போட்டிகளில் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது நிலை மேலும் மோசமானது. முதல் இன்னிங்சில் ஃபீல்டிங் செய்யும்போது இரண்டு கேட்ச்சுகளை தவற விட்ட அவரது கான்ஃபிடன்ஸ் லெவல் மோசமாக இருப்பதை வெளிக்காட்டியது. மேலும் அதில் ஒரு பந்து அவரது கண்ணை பதம் பார்த்தது. 17-வது ஓவரில் அக்சர் படேல்,  பெஹ்ரன்டோர்ஃப் ஓவரில் லாங்-ஆன் திசையில் அடித்தபோது இந்த சம்பவம் நடந்தது. பந்தை பிடிக்க முயன்ற சூர்யகுமார் யாதவின் கண்ணுக்கு மேல் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. உடனடியாக பிசியோ வர, பின்னர் மைதானத்திற்கு வெளியே அமர்ந்திருந்தார்.






டக் அவுட்


இரண்டாவது இன்னிங்சின்போது பேட்டிங் ஆட வந்த அவர் மீண்டும் ஒருமுறை முதல் பந்திலேயே டக் அவுட்டாக, அவரது நம்பிக்கை ஒட்டுமொத்தமாக துவண்டு போனது. 16வது ஓவரில் பெரிய ப்ரெஷர் ஏதுமல்லாத நிலையில் வந்த அவர், முகேஷ் குமார் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் கையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடந்த 26 நாட்களில் அவர் கோல்டன் டக் அவுட் ஆவது இது நான்காவது முறை என்பதுதான் இதில் சோகம். ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் ஆகி இருந்தார். பயங்கரமான ஃபார்மில் இருந்து ஒருவர் இவ்வளவு வீழ முடியுமா என்று பலர் வியந்து வருகின்றனர். பல ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். மீண்டும் அவர் ஃபார்முக்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.