மகேந்திர சிங் தோனி கடந்த திங்களன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிராக விளையாடியபோது, கடைசி ஓவரில் களம் இறங்கி முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி தனது அதிரடி பேட்டிங்கை காட்டி சென்னை ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். அடுத்த பந்தும் சிக்ஸருக்கு முயற்சி செய்து ஆட்டமிழந்திருந்தாலும் பழைய தோனியை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் திளைத்தனர். 4 ஆண்டுகள் கழித்து சென்னையில் தோனி களமிறங்கியதால் சேப்பாக்கம் அதிர்ந்தது, இது மெரினா வரை உணரப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்: GT in IPL: காயத்தால் வெளியேறிய கேன் வில்லியம்சன்.. முக்கிய ஆல்ரவுண்டரை உள்ளே இழுத்த குஜராத்..! யார் அவர்?


சேப்பாக்கில் தோனியின் சரவெடி


சென்னையின் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 12 ரன்கள் வித்தியாசத்தில் எல்எஸ்ஜி அணியை வீழ்த்தியது. இதனால் கடைசி ஓவரில் தோனி அடித்த இரண்டு சிக்ஸர்கள் தான் போட்டியை வெல்ல காரணம் என்று ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர். ரசிகர்கள் பலர் தோனியின் அதிரடியை கொண்டாடிய நிலையில், தோனியின் ’தில்’லானா பேட்டிங் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் ஈர்த்தது.










ஆனந்த் மஹிந்திரா ட்வீட்


அவர் 41 வயதான தோனியின் தைரியத்தையும், அதிரடியையும் கண்டு வியந்தார். மேலும் தோனியை சூப்பர் ஹீரோ என்று கூறி, சென்னை அணி நிர்வாகம் அவரது ஜெர்சியில் பின்னால் ஒரு துணியை கட்டி விட வேண்டும் என்று ட்வீட் செய்ய, அந்த ட்வீட் தீயாய் பரவியது. "@ChennaiIPL #MSDhoni இன் ஜெர்சியில் 'கேப்'பை (சூப்பர் ஹீரோ உடையில் பின்னால் இருக்கும் துணி) இணைக்க வேண்டும் என நினைக்கிறேன். AI டிசைன்களை பதிவிடுங்கள்," என ரசிகர்களிடம் கேட்டிருந்தார். 














மளமளவென வந்த AI டிசைன்கள்


உடனே ai டிசைன்கள் பறந்தன, ரசிகர்கள் ஆர்வமாக பல வண்ணங்களில் பல வித்யாசமான படங்களை எடுத்து அனுப்பினர். ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டுக்கு முதலில் நிலாய் சிங் என்ற நபர் தோனி சூப்பர் ஹீரோ உடை அணிந்திருக்கும் AI-உருவாக்கிய படங்களுடன் பதிலளித்தார். பின்னர் பல்வேறு கான்செப்ட் சீருடைகளை அணிந்த தோனியின் பல படங்கள் வந்து விழத் துவங்கின. இதற்காகத்தான் காத்திருந்தேன் என்று ஆனந்த் மஹிந்திரா பதிலளித்தார். பலர் இந்த படத்தில் தோனி கம்பிர் போல தோற்றமளிப்பதாக கூறினார். இருப்பினும் இதில் பல படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.