16ஆவது சீசன் ஐ.பி.எல்.தொடர் நேற்று முன் தினம் (மார்ச்.31) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. மோதும் போட்டிகளுக்கு மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்க சென்னை மெட்ரோ மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் இணைந்து சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன.


இலவச பயணம்:


சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த சிறப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை அணி பங்கேற்கும் போட்டிகள் அன்று மட்டும், சென்னை மெட்ரோவில் ரசிகர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி குஜராத் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சென்னை அணி நாளை (மார்ச்.03) லக்னோ அணியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் மோதும் நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆர்வத்துடன் வருகை தர உள்ளனர். இந்நிலையில், இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


நேரடி ஒளிபரப்பு:


அதேபோல், போட்டி நாள்களின் இரவு நேரங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்காக மெட்ரோ ரயில்கள் இயக்கம் கூடுதலாக 90 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சென்னையில் 5 மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், வட பழனி, செண்ட்ரெல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ரயில் நிலையங்களில் எல்இடி திரையில் ஒளிபரப்படும் என்றும், போட்டிகளைப் பார்ப்பதற்கு தனிக் கட்டணம் ஏதுமில்லை மற்றும் சாதாரண மெட்ரோ பயணம் மற்றும் ரயில் நிலையங்களில் தங்கும் கட்டணமாக 1 மணி நேரத்துக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இணைந்து ஏப்ரல், மே மாதங்களில் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டி நாட்களிலும் ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் வசதியாகப் பயணிக்க வழிவகை செய்துள்ளன. ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கான க்யூஆர் கோட் (QR Code) உடைய அனுமதி டிக்கெட்டுகளை உபயோகப்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணித்து திரும்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, மேலும் மெட்ரோ நிலையத்திலிருந்து போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்துக்கு பஸ் சேவையையும் வழங்க உள்ளது.