கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2 முறை கோப்பையை வென்று கொடுத்தவர் கவுதம் கம்பீர். கடந்த 2 ஆண்டுகளாக லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர், இந்தாண்டு மீண்டும் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இவரது சிறப்பான வழிநடத்தலின்கீழ், ஐபிஎல் 2024 முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. கம்பீர் ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது 7 ஆண்டு கேப்டன்சி வாழ்க்கையில் அவர் செய்த ஒரு தவறு, கம்பீரை இன்னும் வாட்டுவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர் என்ன சொன்னார்..?
கவுதம் கம்பீர் 7 ஆண்டுகள் ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையிலான கொல்கத்தா அணி இரண்டு முறை கோப்பை வென்றது. இருப்பினும், சூர்யகுமார் யாதவின் திறமையை தன்னால் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என வருத்தம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், “ ஒரு வீரரின் சிறந்த திறனை கண்டறிந்து அதை உலகுக்கு காட்டுவதுதான் ஒரு கேப்டனின் பணி. எனது 7 வருட கேப்டன் பதவியில் எனக்கு ஏதேனும் வருந்தது என்றால், அது சூர்யகுமார் யாதவை பற்றியதுதான்.
சூர்யகுமாரின் முழுதிறமையை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்டேன் என்பதுதான். அப்போதைய அணியின் காம்பினேஷந்தான் அதற்கு காரணம். அதேபோல், சூர்யகுமார் யாதவை அணியில் இருந்து விடுவித்ததற்கு இன்றுவரை வருத்தப்படுகிறேன்.
மூன்றாம் இடத்தில் நீங்கள் ஒரு வீரரை மட்டுமே களமிறக்க முடியும், மேலும் ஒரு தலைவராக நீங்கள் மீதமுள்ள 10 வீரர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர் மூன்றாவது இடத்தில் மிகவும் திறமையாக இருந்திருப்பார், ஆனால் அவர் ஏழாவது இடத்தில் சமமாக சிறப்பாக செயல்படுவார் என்று எனக்கு தோன்றியது. அதன் காரணமாகவே அவரை என்னால் பயன்படுத்த முடியாமல் போனது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ சூர்யாவும் ஒரு டீம் மேன். யார் வேண்டுமானாலும் நல்ல வீரராகலாம், ஆனால், டீம் மேனாக மாறுவது கடினம். அவரை 6வது அல்லது 7வது இடத்தில் விளையாடினாலும் சரி, பெஞ்சில் உட்கார வைத்தாலும் சரி, அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே அணிக்காக செயல்பட தயாராக இருந்தார். அதனால்தான் அவரை கொல்கத்தா அணியின் துணைக் கேப்டனாக மாற்றினோம்” என்றார்.
கொல்கத்தா அணியில் இருந்தாரா சூர்யகுமார் யாதவ்..?
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிதான் சூர்யகுமார் யாதவிற்கு ஒரு அடையாளத்தை கொடுத்து, இந்திய அணியில் வாய்ப்பை வழங்கியது. தற்போது ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்திலும் இருக்கிறார். கடந்த 2014- 2017 வரை சூர்யாகுமார் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போது, அந்த அணிக்காக மிக குறைந்த அளவிலேயே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதிலும், அவர் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். சூர்யா 2012ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். இந்த ஆண்டு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விடுவித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யாகுமார் யாதவ், கிட்டத்தட்ட 3000 ரன்களுக்கு மேல் அடித்து விளையாடி வருகிறார். மேலும் அவர் பல ஆண்டுகளாக கேப்டன் ரோஹித்தின் மிகவும் நெருக்கமாக நண்பர்களில் ஒருவர். இருப்பினும் ரோஹித் இனி அணியின் கேப்டனாக இல்லை என்ற காரணத்திற்காகவும், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு கீழ் சூர்யாகுமார் யாதவிற்கு விளையாட விருப்பமில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.