இந்தியன் பிரீமியர் லீக்கின் நேற்றைய போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. 


இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 56 ரன்களும், நிதிஷ் ராணா 48 ரன்களும் எடுத்திருந்தனர். 


அடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 7 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஃபாப் டு பிளெசிஸ் அவுட்டாக, விராட் கோலி மட்டுமே அரைசதம் அடித்து போராடினார். மற்ற வீரர்கள் யாரும் ஜோபிக்காததால் ஆர்சிபி அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 






இந்த சீசனில் ஆர்சிபியை பொறுத்தவரை, ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் மட்டுமே பேட்டிங்கில் ஆடி வருகின்றனர். கடந்த சீசனில் இறுதி ஓவர்களில் புயலாக விளையாடி, ஆர்சிபி அணிக்கு வெற்றியை பெற்று தந்த தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் சொதப்பி வருகிறார். 


கடந்த சீசனில் தினேஷ் கார்த்திக் டெத் ஓவரில் ஆவேசமாக பேட்டிங் செய்தார். அதன் மூலமாகவே ஆர்சிபி அணி பிளே ஆப் வரை தகுதிபெற்றது. ஆனால், இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக தினேஷ் கார்த்திக் 8 போட்டிகளில் விளையாடி வெறும் 86 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 28. அதேபோல், இந்த சீசனில் கார்த்திக் இரண்டு சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளார். 


கடந்த 2022ம் ஆண்டு சீசனில் தினேஷ் கார்த்திக் 16 போட்டிகளில் 330 ரன்கள் எடுத்தார். மேலும், 10 முறை ஆட்டமிழக்காமல் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு போராடினார். மேலும், 22 சிக்ஸர்களை பறக்கவிட்டு இருந்தார். 






கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக், மீண்டும் ஒரு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே, ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த சீசனில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது போட்டி இதுவாகும். இந்த இரண்டு போட்டியிலும் கொல்கத்தா அணியிடம் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது.