இறுதிப்போட்டிக்கு முதலில் செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் துபாயில் மோதினர். டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியின் பேட்டிங்கை தொடங்கிய ப்ரித்வி ஷா அதிரடியாகவே ஆடினார். தீபக்சாஹர் வீசிய 3வது ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகளை விளாசினார். மறுமுனையில் ஷிகர்தவான் 7 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். புதிய முயற்சியாக மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்ட அக்‌ஷர் படேல் அக்ஷர் படேல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி வந்த பிரித்விஷா அரைசதம் அடித்தார். அரைதசம் அடித்த சிறிது நேரத்தில் பிரித்விஷா 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


இதையடுத்து, டெல்லி கேப்டன் ரிஷப்பண்டும் – ஹெட்மயரும் தொடக்கத்தில் நிதானமாக தொடங்கி அதிரடியாக ஆடினர். ஹெட்மயரும், ரிஷப் பண்டும் கடைசி 5 ஓவர்களில் அதிரடியில் இறங்கினர். இதனால், டெல்லி அணி 17.2 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது. அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 28 பந்தில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஷர்துல் தாக்கூர் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இருப்பினும் டெல்லி அணி 20 ஓவர்களில் 172 ரன்களை குவித்தது. ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்திருந்தார்.




இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் பாப்டுப்ளிசிஸ் நோர்ட்ஜே வீசிய முதல் ஓவரிலே 1 ரன்னில் போல்டாகி வெளியேறினார். ஆனால், அதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜிம், ராபின் உத்தப்பாவும் அதிரடியாக ஆடினர். கடந்த சில போட்டிகளில் சொதப்பிய உத்தப்பா இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக ஆடினார்.


அவர் 35 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அவருக்கு நன்றாக ஒத்துழைப்பு அளித்து ருதுராஜ் கெய்க்வாடும் அதிரடியாக ஆடினார். இருவரின் ஆட்டத்தாலும் 12.1 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது. டெல்லி அணிக்காக 14வது ஓவரை வீசிய டாம் கரன் பந்தில் உத்தப்பா அளித்த கடினமான கேட்சை பவுண்டரி லைனில் ஸ்ரேயாஸ் அய்யர் அற்புதமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.




டெல்லி அணியை போல சென்னை அணியும் பரிசோதனை முயற்சியாக 3வது விக்கெட்டிற்கு ஷர்துல் தாக்கூரை களமிறக்கியது. ஆனால், ஷர்துல் தாக்கூர் தான் சந்தித்த முதல் பந்திலே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய அம்பத்தி ராயுடு கூடுதலாக ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடியபோது ரபாடாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், சென்னை அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு120 ரன்களை எடுத்தது.


சென்னை அணியின் வெற்றிக்கு 18 பந்தில் 35 ரன்கள் தேவைப்பட்டது. நோர்ட்ஜே வீசிய18வது ஓவரில் மட்டும் 11 ரன்கள் அடிக்கப்பட்டது. ஆவேஷ்கான் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த பந்தை அக்‌ஷர் படேல் பிரமாதமாக கேட்ச் பிடித்தார். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கேப்டன் தோனி களமிறங்கினார். தோனி தான் சந்தித்த இரண்டாவது பந்திலே சிக்ஸர் அடித்தார்.




சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. டாம் கரன் வீசிய முதல் பந்திலே மொயின் அலி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனி இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். 4 பந்தில் சென்னை வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. மூன்றாவது பந்திலும் தோனி பவுண்டரி அடித்தார். டாம் கரன் 4வது பந்தை வைடாக வீசியதால் சென்னை வெற்றிக்கு 3 பந்தில் 5 ரன்கள் தேவைப்படுகிறது. தோனி 3வது பந்தையும் பவுண்டரிக்கு அடித்து சென்னையை வெற்றி பெற வைத்தார். தோனி 6 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்னுடன் களத்தில் இருந்தார்.


இதனால், இரண்டு பந்துகள் மீதம் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி 9வது முறையாக ஐ.பி.எல். தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் டெல்லி அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது.