ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டிக்காக முன்கூட்டியே இங்கிலாந்து சென்று, தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியை அவர்களது பயணத்திற்கு மத்தியில், வாகனத்திலேயே பார்த்துக் கொண்டு சென்ற புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


இறுதிப்போட்டியை பார்த்துக்கொண்டே சென்ற இந்திய வீரர்கள்


2023 சீசனில் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அணியில் உள்ள, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சிலர் முன்கூட்டியே லண்டனை அடைந்துள்ளனர். அவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) முதல் பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது. இருப்பினும் ஒரே வாரத்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் ஆடவுள்ள நிலையில், நேற்று இரவு ஐபிஎல் 2023 போட்டிகள் ரிசர்வ் நாளில் நடத்தப்பட்டது. அங்கு பயிற்சியில் இருப்பவர்கள் ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்த்துக்கொண்டே லண்டனுக்குள் பயணம் செய்துள்ளனர்.



லண்டனில் இந்திய வீரர்கள்


ஐபிஎல் 2023 இன் லீக் கட்டத்தின் முடிவில் வெளியேறிய அணியில் உள்ள வீரர்கள் முதல் பேட்ச்சாக லண்டனுக்கு புறப்பட்டனர். விராட் கோலி, முகமது சிராஜ், ஆர் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் மற்றும் உமேஷ் யாதவ் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான துணை ஊழியர்கள் உட்பட முதல் பேட்சில் ஒரு பகுதியாக சென்றனர். இவர்களோடு செட்டேஷ்வர் புஜாரா ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்ததால் அவரும் இணைந்தார். அவர் அங்கு சசெக்ஸ் அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப்பில் ஆடிக்கொண்டிருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: CM Stalin Wish CSK: 'தோனியின் தலைமையின் கீழ் 5வது கோப்பை..' சி.எஸ்.கே.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!


தோனி ஸ்டம்பிங்கை பார்த்த வீரர்கள்


திங்களன்று, அவர்கள் லண்டனில் தங்கள் முதல் பயிற்சி அமர்வைக் கொண்டிருந்தனர், அதன் ஒரு காட்சியை பிசிசிஐ அவர்களின் சமூக ஊடகப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. அந்த பயிற்சிக்கு பிறகு அவர்கள் ஹோட்டலுக்குத் திரும்பிய வழியில், ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியை அவர்கள் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டே சென்றுள்ளனர். இடைவிடாத மழையால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த இறுதிப் போட்டி ரிசர்வ் நாளில் நடத்தப்பட்டது. அந்த போட்டியில், 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில்லை அற்புதமாக ஸ்டம்பிங் செய்த எம்.எஸ். தோனியின் வேகத்தை கண்டு இந்திய அணி வீரர்கள் குதூகலம் அடைந்தனர். 






கோப்பையை வென்ற சென்னை அணி


பிசிசிஐ பகிர்ந்துள்ள அந்த புகைப்படங்களில் வீரர்கள் அந்த காட்சியை தான் பார்த்துக்கொண்டிருந்தனர். அதில் கண் சிமிட்டும் இடைவெளியில் தோனி ஸ்டம்பை தாக்கியது அவர்களை திகைக்க வைத்தது. முதலில் பேட்டிங் செய்ந்த குஜராத் அணியின் கில் மற்றும் விருத்திமான் சாஹா இருவரும் இணைந்து வேகமாக ரன் குவிக்க, குஜராத் டைட்டன்ஸ் ஒரு பெரிய ரன்னை குவித்தது. 214 ரன்களை குவித்திருந்தாலும், மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு, 15 ஓவரில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. டெவோன் கான்வே அதிரடியாக ஆட, ஜடேஜா கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை வசமாக்கினார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.