ஐபிஎல் தொடரில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் குஜராத்தில் இருந்து சென்னைக்கு வருகை தந்துள்ளனர். 


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (மே 29) முடிவடைந்தது. சென்னை, குஜராத், ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, லக்னோ ஆகிய 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றது. இதில் லீக் ஆட்டத்தின் முடிவில் சென்னை, குஜராத், லக்னோ, மும்பை அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த பிளே ஆஃப் ஆட்டங்களில் சென்னை, குஜராத் அணிகள் இறுதிப்போட்டிக்குள் சென்றது.


இதில் நேற்று முன்தினம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முழுக்க முழுக்க மழை பெய்ததால் ஆட்டம் நேற்று மாற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி  3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த சென்னை அணிக்கு மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களில் வெற்றி இலக்காக 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 


இதில் ஆட்டத்தின் இறுதிப்பந்தில் த்ரில் வெற்றி பெற்று சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதனை சென்னை அணி ரசிகர்கள் நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளம்பிங் ஆகியோர் இன்று சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்தனர். அவர்களை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அழைத்து வந்தனர்.


மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி கோப்பையை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூடியதால் அந்த இடமே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து  வெற்றி கோப்பையை தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு தனி கார் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அதேசமயம் சென்னை அணி வீரர்கள் யாரும் தற்போது வரை சென்னை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.