சென்னை அணி, நேற்றைய போட்டியை வென்று பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த நிலையில், போட்டி முடிந்த பொது தோனி மிகவும் சீரியசாக ஜடேஜாவிடம் பேசிக்கொண்டு சென்ற விடியோ வைரலானது.
பிளேஆஃப்-இல் சென்னை அணி
அருண் ஜெட்லி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி போட்டியை வென்றது. சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அடுத்ததாக நடந்த போட்டியில் லக்னோ அணி வென்று பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்த சென்னை அணி, முதல் குவாலிஃபையருக்கு தகுதிபெற்றுள்ளது. இதனால் சென்னை அணிக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இரண்டு முறை கிடைக்கும்.
சீரியசாக பேசிய தோனி
சிஎஸ்கே வெற்றியைத் தொடர்ந்து, தோனி, ரவீந்திர ஜடேஜாவிடம் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினார். வென்ற மகிழ்ச்சி இல்லாமல் மிகவும் சீரியசாக தோனி பேச அதற்கு ஜடேஜாவும் சீரியசாக பதில் சொல்ல, இந்த உரையாடல் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் கிளம்பியது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாவிட்டாலும், பிளே-ஆஃப் சுற்று குறித்த தயார்படுத்தல் திட்டமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகிக்கின்றனர். இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே 12வது முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், தோனியின் அனுபவத்தை வைத்து சிஎஸ்கே இன்னொரு பட்டம் வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
தோனி பேட்டி
"வெற்றிக்கான செய்முறை பெரிதாக ஒன்றும் இல்லை, நீங்கள் முயற்சி செய்து சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அணியில் சிறந்த இடத்தை வழங்குங்கள். அவர்களது பலவீனங்களை புரிந்து, அதில் அவர்களை மேம்படுத்த வேண்டும். அணிக்காக யாராவது தங்கள் இடத்தை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். நிர்வாகத்திற்கும் நன்றி பட்டுள்ளோம், அவர்கள் எப்போதும் எங்கள் பக்கம் நிற்கிறார்கள். வீரர்கள் மிக முக்கியமானவர்கள், வீரர்கள் இல்லாமல் நாம் எதுவும் செய்ய முடியாது. டெத் பவுலிங்கை பொறுத்தவரை, தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்," என்று தோனி போட்டிக்கு பின் பேட்டியில் கூறினார்.
டெல்லிக்கு கடைசி இடமா?
"வெளியில் இருந்து பிரச்சினைகளை தீர்ப்பது கடினம், நாங்கள் வீரர்கள் மற்றும் சுற்றுச்சூழலுடன் ஒத்துப்போக முயற்சிக்கிறோம். அவர்கள் 10 சதவீதமாக வந்தாலும், 50 சதவீதமாக மாற்றி, அவர்களை அணியில் சிறப்பாக பொருத்த முடியும்,” என்று தோனி மேலும் கூறினார். இதற்கிடையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடரை 10 புள்ளிகளுடன் முடித்தது, மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று வென்றால், டெல்லி கடைசி இடத்தை அடைவார்கள். இந்த தொடர் அவர்களுக்கு மிகவும் மோசமான தொடராக இருந்த நிலையில் அடுத்த ஆண்டு ரிஷப் பண்ட் உடன் பெரும் பலத்துடன் வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.