டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள்:


பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர் போராட்டத்திற்கு பிறகும், பிரிஜ் பூஷனுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், நேற்று கவனம் ஈர்க்கும் விதமாக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திற்கு ஐபிஎல் போட்டி பார்க்க சென்றனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்திற்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள், வெளியில் நின்று கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இந்த சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கி பேசினார். "டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) போட்டிக்கான டிக்கெட்டுகளை மல்யுத்த வீரர்கள்  வாங்கியிருந்தனர். அவ்வாறு செய்த போதிலும், அவர்கள் மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. போலீசார் எங்களை தடுத்து நிறுத்தினர். ஏன் என்பதை அறிய விரும்புகிறோம்" என அவர் கூறினார்.


ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வெளியே பரபரப்பு:


இந்த செய்தியாளர் சந்திப்பில் மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகட் ஆகியோரும் உடனிருந்தனர். மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், "டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியை பார்க்க டிக்கெட் வாங்கி வந்த எந்த மல்யுத்த வீரருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. போட்டியைக் காண 10 முதல் 12 மல்யுத்த வீரர்கள் மைதானத்திற்கு வந்தனர்.


ஆனால், அவர்களில் ஐந்து பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்தது. டிக்கெட் அல்லது பாஸ் இல்லாதவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. டிக்கெட் வைத்திருந்தவர்களை மட்டும் வாயில் வழியாக மைதானத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். டிக்கெட் வைத்திராத மல்யுத்த வீரர்கள் மைதானத்திற்குள் செல்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். சிலர், இதுகுறித்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்" என்றார்.