அபுதாபியில் இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல், தொடரின் 36வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதன்படி, டெல்லி அணியின் இன்னிங்சை ஷிகர்தவானும், பிரித்வி ஷாவும் தொடங்கினர். இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் ரன்களை சேர்க்கத் தொடங்கியபோது, மூன்றாவது ஓவரையே அந்த அணியின் இளம் பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகியை அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வீச வைத்தார். அவரது முயற்சிக்கு உடனடி பலன் கிட்டியது.
கார்த்திக் தியாகி வீசிய முதல் பந்திலேயே ஷிகர்தவான் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். இதனால், டெல்லி அணி 18 ரன்களிலே தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 8 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார், அவர் வெளியேறிய அடுத்த ஓவரிலே மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சு புயல் சேத்தன் சக்காரியா பந்துவீச்சில் பிரித்வி ஷாவும் 10 ரன்களை எடுத்த நிலையில் லிவிங்ஸ்டனிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார்.
21 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை டெல்லி இழந்ததால் அந்த அணியை கேப்டன் ரிஷப் பண்டும், முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்து மீட்டனர். அப்போது, ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களை எடுத்திருந்த நிலையில் முஸ்தபிஷீர் பந்துவீச்சில் போல்டாகினார். இதையடுத்து, மறுமுனையில் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடத் தொடங்கினார்.
அரைசதத்தை கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 43 ரன்களை எடுத்திருந்த நிலையில், ராகுல் திவேதியா பந்துவீச்சில் சஞ்சு சாம்சனால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால், டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 15 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களை எடுத்திருந்தது.
அப்போது லலித் யாதவுடன் ஜோடி சேர்ந்த அதிரடி வீரர் ஹெட்மயர் தனி ஆளாக போராடி அணியின் ஸ்கோர் உயர போராடினார். அவர் அடுத்தடுத்து பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். அப்போது, வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஷிர் ரஹ்மான் வீசிய ஆட்டத்தின் 16.3 ஓவரில் சேத்தன் சக்காரியாவிடம் கேட்ச் கொடுத்த ஷிம்ரான் ஹெட்மயர் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 28 ரன்களை எடுத்தார்.
கடைசி கட்டத்தில் ராஜஸ்தான் ராயல் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஹெட்மயர் வெளியேறிய சிறிது நேரத்தில் அதிரடியாக ஆட முயற்சித்த அக்ஷர் பட்டேலை சேத்தன் சக்காரியா வெளியேற்றினார். இருப்பினும் தொடக்கத்திலே இரு முக்கிய வீரர்களை இழந்ததால் டெல்லி அணி 150 ரன்களை கடக்குமா என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி கட்ட வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்ததால் அந்த அணி 150 ரன்களை கடந்தது. டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது. அந்த அணியின் லலித் யாதவ் 15 பந்துகளில் 14 ரன்களும், அஸ்வின் 6 ரன்களும் எடுத்திருந்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக முஸ்தபிஷிர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், சேத்தன் சக்காரியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் 9வது ஓவருக்குள்ளேயே 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். அவரது முயற்சிக்கும் நல்ல பலன் கிட்டியது. இருப்பினும் கடைசி கட்டத்தில் டெல்லி வீரர்கள் ஓரளவு ரன்களை சேர்த்து 150 ரன்களை கடந்தனர்.