DC vs RCB: முதல் போட்டியில் மும்பையை வென்ற பிறகு தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த பெங்களூரு அணியும், நான்கு போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வெற்றியைக் கூட பெறாத டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமான பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய பெங்களூரு அணி முதல் இரண்டு ஓவர்களில் பவுண்டரிகளை விளாசி மைதானம் முழுவதும் டெல்லி அணி வீரர்களை ஓடச் செய்தனர். சிறப்பாக விளையாடி வந்த பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தனது விக்கெட்டை மிட்ஷெல் மார்ஷ் பந்து வீச்சில் இழந்தார். இதன் பின்னர் விராட் கோலியுடன் லோம்ரோர் களமிறங்கினார். இருவரில் விராட் கோலி அடித்து ஆட லோம்ரோர் நிதானமாக ஆடினார். பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 47 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் டெல்லி அணியின் சுழல் பந்து வீச்சில் ரன் எடுக்க தடுமாறிய பெங்களூரு அணி ரன் சேகரிப்பில் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் அதிரடியில் இறங்கிய விராட் கோலி 33 பந்தில் அரைசதம் எட்டினார். ஆனால் அவரும் தனது விக்கெட்டை அடுத்த பந்தில் இழந்தார். அதன் பின்னர் வந்த மேக்ஸ் வெல் அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட மைதானமே ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தது.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி 50 ரன்களும், லோம்ரோர் 26 ரன்களும், மேக்ஸ்வெல் 24 ரன்களும் சேர்த்தனர். டெல்லி அணி சார்பில் மிட்ஷெல் மார்ஷ், குல்தீப் யாதவ், லலித் யாதவ் தல 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்து இருந்தது. இதனால், டெல்லி அணியின் இம்பேக்ட் ப்ளேயர் ப்ரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரில் ரன் அவுட் ஆக, இரண்டாவது ஓவரில் மிகவும் எதிர்பார்க்கப்பர்ட்ட மிட்ஷெல் மார்ஷ் டக்-அவுட் ஆனார். இங்கு தொடங்கிய டெல்லி அணியின் விக்கெட் அணி வகுப்பை தடுக்கவே முடியவில்லை. அந்த அணி பவர்ப்ளே முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. டெல்லி அணி சார்பில் மனீஷ் பாண்டே மட்டும் 38 பந்தில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.