ஐபிஎல் 2024:
ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடிபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 27) டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் 43 வது லீக் போட்டி நடைபெறுகிறது. அந்தவகையில் ரிஷப் பண்ட் தலைமையிலானா டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்:
முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது. பின்னர் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது மும்பை அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இந்த ஜோடி 35 ரன்களை எடுத்த போது ரோகித் சர்மா தன்னுடைய விக்கெட்டை கலீல் அகமது பந்தில் பறிகொடுத்தார். 8 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மட்டும் விளாசி 8 ரன்கள் எடுத்தார். மறுபுறம் இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார் சூர்யகுமார் யாதவ். அடுத்த 10 ரன்கள் எடுப்பதற்குள் இவர்களது ஜோடியை பிரித்தார் முகேஷ் குமார்.
மும்பையின் போராட்டம் வீண்:
அதன்படி 14 பந்துகள் களத்தில் நின்ற இஷான் கிஷன் 4 பவுண்டரிகள் விளாசி 20 ரன்கள் எடுத்தார். இதனிடையே அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார் திலக் வர்மா. அப்போது சூர்யகுமார் யாதவ் கலீல் அகமது பந்தில் விக்கெட்டை இழந்தார். மொத்தம் 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 26 ரன்கள் எடுக்க அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியாவும் திலம் வர்மாவும் ஜோடி சேர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துகளை பறக்கவிட்டனர்.
டெல்லி கேபிடல்ஸ் வெற்றி:
ஹர்திக் பாண்டியா இந்த சீசனின் முதல் அரைசதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். 24 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 46 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த நேஹால் வதேரா 4 ரன்களில் நடையைக் கட்டினார். இதனிடையே தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் திலக் வர்மா.
அவருடன் சேர்ந்த டிம் டேவிட்டும் அருமையாக விளையாடினார். ஆனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 247 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்தவகையில் இன்றைய போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. டெல்லி அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை முகேஷ் குமார் மற்றும் ராசிக் தார் சலாம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.