ஐ.பி.எல் 2024:


ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் லக்னோ அணிகள் விளையாடின.


சென்னை - லக்னோ:


இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினார்கள். 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ரஹானே 1 ரன்கள் மட்டுமே எடுத்து மேட் ஹென்றி பந்தில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தார் டேரில் மிட்செல்.  10 பந்துகள் களத்தில் நின்ற மிட்செல் 1 பவுண்டரி உட்பட மொத்தம் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.


பின்னர் கெய்க்வாட் உடன் ஜோடி சேர்ந்தார் ரவீந்திர ஜடேஜா. இவர்களது ஜோடி லக்னோ அணியின் பந்து வீச்சை நொறுக்கியது. இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 50 ரன்களை எடுத்து அரைசதத்தை பதிவு செய்தார். 19 பந்துகள் களத்தில் நின்ற ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் எடுத்து மொஹிஸ்கான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது களம் இறங்கிய ஷிவம் துபே ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இவர்களது ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


இதனிடையே சி.எஸ்.கே அணியின் சின்ன சிங்கம் ருதுராஜ் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் விளாசினார்.கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 108 ரன்களை குவித்தார். அதேபோல் ஷிவம் துபே 27 பந்துகள் களத்தில் நின்ற ஷிவம் துபே 3 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 66 ரன்களை குவித்தார். கடைசி 1 பந்திற்கு களம் இறங்கிய தோனி பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்தது.


211 ரன்கள் இலக்கு:


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினார்கள். இதில் குயின்டன் டி காக் டக் அவுட் முறையில் வெளியேறினார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கே.எல். ராகுல் 14 பந்துகள் களத்தில் நின்று 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 16 ரன்கள் எடுத்து முஸ்தாபிஷர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


ருத்ரதாண்டவம் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் 




பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் உடன் ஜோடி சேர்ந்தார் தேவ்தட் படிக்கல். இவர்களது ஜோடி லக்னோ அணிக்கு ரன்களை வேகமாக சேர்த்தது. இதனிடையே மார்கஸ் ஸ்டோனிஸ் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். அப்போது தேவ்தட் படிக்கல் 13 ரன்கள் மட்டுமே எடுத்து பத்திரானா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 


நிக்கோலஸ் பூரன் ஸ்டோனிஸ் உடன் ஜோடி சேர்ந்தார். 28 பந்துகளில் 64 ரன்கள் என்ற இலக்கு இருந்த போது நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து ஷர்துல் தாக்கூர் வீசிய 16 வது ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனிடையே 34 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த வகையில் மொத்தம் 15 பந்துகள் களத்தில் நின்ற பூரன் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்தார்.




மார்கஸ் ஸ்டோனிஸின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை எட்டியது.  213 ரன்கள் எடுத்து லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. கடைசி வரை களத்தில் நின்ற ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 124 ரன்களை குவித்தார்.