ஐபிஎல் 2022 ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் வழக்கம் போல தன்னுடைய ரசிகர்களுக்குத் தனது இன்ஸ்டாகிராம் மூலம் காதலர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த `தி வுல்ஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட்’ திரைப்படத்தில் டிகாப்ரியோவின் நடனக் காட்சியில் அவரது முகத்திற்குப் பதிலாக தனது முகத்தை வைத்து பதிவிட்டுள்ளார் டேவிட் வார்னர். இதனை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், இந்த வீடியோவுக்கு டேவிட் வார்னரின் மனைவி கேனிட்ஸ் ரியாக்ட் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 12 அன்று, பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 6.25 கோடி ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டேவிட் வார்னர், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடவுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய வார்னர், தொடர் தோல்விகள் காரணமாக தனது கேப்டன் பதவியை கேன் வில்லியம்சனுக்கு அளிக்கும் சூழல் உருவாகியிருந்தது. எனினும் மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கும் வார்னர் தனது திறமையை கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் வெளிப்படுத்தி, அவரை விமர்சித்தவர்களை வாயடைக்க வைத்திருந்தார்.
2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணியை இறுதி போட்டியில் வெல்வதற்கான முக்கிய காரணமாக வார்னர் இருந்தார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2022 ஏலத்தின் போது, ஷர்துல் தாகூரை 10.75 கோடி ரூபாய்க்கு அதிகபட்சமாக வாங்கியிருந்தது. பவுலரான குல்தீப் யாதவ் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டவுடன், டேவிட் வார்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறேன்.. என் புதிய அணியினர், அணியின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்.. டெல்லி அணியின் புதிய, பழைய ரசிகர்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு, டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தன்னுடைய ஐபிஎல் அறிமுகத்தைத் தொடங்கினார். இந்த அணியின் பெயர் மாற்றப்பட்டு, தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் என்ற பெயரில் விளையாடி வருகிறது.