இரு அணிகளும் 440 ரன்களுக்கு மேல் அடித்த அதி பயங்கரமான பேட்டிங் பிட்சில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 8 ரன்கள் வித்யாசத்தில் போட்டியை வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னெறியுள்ளது. ஆட்டம் நடந்தது பெங்களூராக இருந்தாலும் அரங்கத்தில் நிறைந்திருந்த மஞ்சள் படை ரசிகர் பட்டாளத்தின் பலத்தை நிரூபித்தது. குறிப்பாக தோனி ஆடிய ஒரே ஒரு பந்துக்கு வெப்த சத்தமும், மொபைல் டார்ச் ஒளியும் சொல்லும் சிஎஸ்கே வரலாற்றை.


அப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் 226 ரன்கள் அடித்தும் கடைசி ஓவரில் வெல்லும் நிலை ஏற்பட்டது சோகம்தான். அந்த அளவுக்கு பந்து வீச்சில் சொதப்பல் இருந்தது. மதீஷா பதிரனா மட்டும் பந்து வீச்சு தாக்குதலில் தனித்து தெரிந்தார். கடைசி ஓவர்களில் கச்சிதமான யார்க்கர்களையும், வெறியேஷன்களையும் கொடுத்த அவருக்குள் ஒரு மலிங்கா தெரிந்ததை யாராலும் மறுக்க முடியாது. அப்படி ஒரு ஸ்டைலில் தான் அவர் பந்தையும் வீசுகிறார். சென்னை அணியின் பந்துவீச்சு எதிர்காலம் என்று தன் பெயரை பதிவு செய்துள்ளார். எப்படியோ 8 ரன்கள் வித்யாசத்தில் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி நிறைய கேட்ச்களை தவற விட்டனர். தோனியே ஒரு கேட்சை தவற விட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



நன்றாக துவங்கிய ஆர்சிபி சேஸிங்


இடையில் மளமளவென சிக்ஸர்களை பறக்கவிட்டு மரண பயத்தை காட்டிய மேக்ஸ்வெல் - டு பிளஸிஸ் ஜோடி ஆட்டமிழந்த பிறகுதான் ஆட்டம் சென்னை அணி பக்கம் திரும்பியது. இரண்டாவது பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி கோலி உட்பட இரண்டு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே விட்டாலும், கிளென் மேக்ஸ்வெல் (36 பந்துகளில் 76 ரன்), கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் (33 பந்தில் 62 ரன்) ஆகியோர் அதிரடி காட்டினர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து ஆர்சிபி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையை அதிகரித்தனர். ஆனால் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் கைவிட்டு போனது.


தொடர்புடைய செய்திகள்: IPL Points Table: திக்..திக்..பெங்களூருவில் சென்னை செய்த சம்பவம்.. ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலின் நிலை என்ன?


சென்னை அணிக்கு கிடைத்த கடைசி ஓவர்


முதலில் ஆடிய சென்னை அணி கணிசமாக ரன்களை குவிக்க, தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு அஜிங்க்யா ரஹானே (20 பந்துகளில் 37) உடன் இணைந்து 74 ரன் குவித்தார். பின்னர் வந்து இமாலய சிக்ஸர்களை பறக்க விட்ட சிவம் தூபே, 101,102 மற்றும் 111 மீட்டர் சிக்ஸர்களை விளாசினார். ஆட்டம் முழுவதும் பேட்டிங் நன்றாக செய்திருந்தாலும் 19வது ஓவர் பெரிய ஓவராக அமையாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. 20 ஓவரில் அவ்வளவு எக்ஸ்டராஸ் நோ-பால், ஃப்ரீஹிட் கிடைத்தும் மிகப்பெரிய ஓவராக மாற்ற முடியாமல் போனது. இத்தனைக்கும் அந்த ஓவரை பாதிக்கு மேல், மேக்ஸ்வெல் வீசவேண்டிய கட்டாயம் வந்தது.



2 பீமரால் வெளியேற்றப்பட்ட ஹர்ஷல் படேல்


முதலில் ஓவரை வீச வந்த ஹர்ஷல் பட்டேலுக்கு ஆரம்பம் முதலே சரியாக அமையவில்லை. ஒரு பந்தை சரியாக வீசிய அவர், அடுத்த பந்தை ஷோல்டரில் விட்டு எரிய, பீமர் என்று கூறி, நோ பால் அறிவித்தனர். அதற்கும் ரிவ்யூ எடுத்தார் தற்காலிக கேப்டன் மேக்ஸ்வெல். அடுத்த பந்தான ஃப்ரீ ஹிட்டில் பெரிய ரன் போகவில்லை. பின்னர் மீண்டும் ஒரு பீமரை வீச அந்த ஓவரை அதற்கு மேல் வீசும் தகுதியை ஹர்ஷல் படேல் இழந்தார். ஒரு ஓவரில் இரண்டு ஓவர் த வெய்ஸ்ட் நோ பால் வீசினர் பந்துவீச்சாளர் அந்த ஓவரை தொடர முடியாது என்பது விதி. அதன்படி அந்த ஓவரின் மீதமுள்ள நான்கு பந்துகளை வீச மேக்ஸ்வெல் வந்தார். ஆனால் தான் செய்யாத தவறுக்கு முதல் பந்து ஃப்ரீ-ஹிட் பந்தாக வீசவேண்டிய நிலையில் வந்தார். அந்த பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் ஜடேஜா. ஆனால் அதன்பிறகு கம்பேக் கொடுத்த மேக்ஸ்வெல், அடுத்த மூன்று பந்தையுமே நன்றாக வீசி வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார், அதில் ஜடேஜா ஆட்டமும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.