IPL 2023 MI vs SRH Match:  ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.  இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுவதால் மும்பை அணிக்கு சற்று சவாலாக இருக்கும். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பந்து வீச முடிவு செய்துள்ளார். 


நடப்பு தொடரில் இதுவரை மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளின் செயல்பாடும் ஒரே விதமாக தான் உள்ளன. முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்த அணிகள், அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முறையே, 8 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன. இன்றைய போட்டியின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில், 5வது இடத்திற்கு முன்னேற இரு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 


இதுவரை ஐபிஎல்லில்


ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும்  ஐதராபாத் அணிகள் இதுவரை, 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9 போட்டிகளில் ஐதராபாத் அணியும், ஒரு சூப்பர் ஓவர் வெற்றி உட்பட 10 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.  கடந்த ஆண்டில் கடைசியாக விளையாடிய போட்டியில் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


கடைசி 5 போட்டிகளின் முடிவுகள்:


இரு அணிகளுக்கு இடையே நடந்த கடைசி 5 போட்டிகளில் ஐதராபாத் அணி 2 போட்டியிலும், மும்பை அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றன. அதேநேரம் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 7 போட்டிகளில், ஐதராபாத் அணி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.


ஐதராபாத்தில் எஸ்.ஆர்.எச் ஆதிக்கம்:


ராஜிவ் காந்தி மைதானத்தில் இதுவரை 46 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 15 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.


கேப்டன் மாற்றம்? 


மும்பை அணியை  கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக ரோகித் சர்மாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்தினார். அதே நேரத்தில் ரோகித் சர்மா இம்பேக் ப்ளேயராக களமிறங்கி பேட்டிங் மட்டும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் சேஸ் செய்த மும்பை அணி வெற்றி பெற்றது.