IPL 2023: ஐபிஎல் போட்டித் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து சென்னை அணி களமிறங்கிய 14 ஆண்டுகளில் தோனிதான் கேப்டனாக இருந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தோனி ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் எனும் செய்தி ஊடங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தோனி அப்படி எதுவும் நான் இப்போது முடிவு செய்யவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், சென்னை அணியின் ரசிகர்களுக்காக சென்னையில் நிச்சயம் விளையாடுவேன், அதன் பின்னர் தான் ஓய்வு குறித்து யோசிப்பேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அமீரகங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தான் போட்டி இந்தியாவில் ஹோம் - அவே முறையில் நடத்தப்படுவதால் மைதானத்தில் ரசிகர்கள் நிரம்பி வழிகின்றனர். தோனிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரம் தொடங்கி கிராமம் வரை உள்ளது. இப்படியான பேரன்பிற்குரிய ரசிகர் பட்டாளத்தினைக் கொண்டுள்ள தோனியின் கடைசி போட்டி எதுவாக இருக்கும் என்ற கேள்வி அவர்களது ரசிகர்களிடத்திலும் உள்ளது. இயல்பாகவே இவருக்காக மைதானத்திற்கு வந்து போட்டியைப் பார்ப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் சீசன்தான் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என செய்திகள் ஆரம்பத்தில் இருந்து பரவி வருவதால், சென்னை அணியின் போட்டிகள் நடக்கும் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இப்படி குவியும் ரசிகர்கள் தோனி களமிறங்கும் போது ஆரவாரமாக கூச்சலிடுகின்றனர். இதனால், மைதானத்தில் அவருக்கு தனி வரவேற்பே கிடைக்கிறது. இந்நிலையில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது முதல் இன்னிங்ஸின் கடைசி இரண்டு பந்துகள் இருக்கும் போது தோனி களமிறங்கினார். அப்போது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ”தோனி...தோனி.. தோனி” என முழங்கினர். இந்த போட்டியைக் காணவந்த பிரபல இந்தி நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா மைதானத்தினை ஆச்சரியத்துடன் பார்த்தார். மேலும் புன்னகைத்தபடி, ”They love him” அதாவது இவர்கள் தோனியின் மீது அன்பாக இருக்கிறார்கள் என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 226 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.