CSK Vs RCB, IPL 2024: சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டி, இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 67 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை, குஜராத், டெல்லி, பஞ்சாப்  மற்றும் லக்னோ ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன.  கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்காக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி பிளே-அஃஃப் சுற்றுக்கு முன்னேறும். தோல்வியுறும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பதால் இது நாக்-அவுட் போட்டியாக மாறியுள்ளது. இதனால், இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை - பெங்களூர் மோதல்:


பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி, 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். மறுமுனையில் ஆரம்பத்தில் தொடர் தோல்விகளால் தடுமாறினாலும், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் வென்று பெங்களூர் அணி, தற்போது பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற தீவிரம் காட்டி வருகிறது. இன்றைய போட்டியில் வெற்றி என்பதை தாண்டி குறிப்பிட்ட சில  வரம்புகளுடன் வெற்றி பெற்றால் மட்டுமே, பெங்களூர் அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பெங்களூர் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கோலி, ரஜத் படிதார், லோம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் அதகளம் செய்து வருகின்றனர். மறுமுனையில் பந்துவீச்சில் முகமது சிராஜ், கர்ன் சர்மா மற்றும் யாஷ் தயாள் அதகளம் செய்து வருகின்றனர். சென்னை அணியில் பேட்டிங்கில் கெய்க்வாட் துபே, ஜடேஜா மற்றும் மிட்செல் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வருகின்றனர். பந்துவீச்சில் சாண்ட்னர், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால், ஒன்று அனைவரும் சிறப்பாக செயல்படுவது அல்லது அனைவரும் ஒரே நேரத்தில் சொதப்புவது என்பது போல் உள்ளதால், சென்னை அணி தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடியாமல் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் சென்னை அணி தங்களது கூட்டு முயற்சியை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூர் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பெங்களூர் அணி அதிகபட்சமாக 218 ரன்களையும், குறைந்தபட்சமாக 70 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 226 ரன்களையும், குறைந்தபட்சமாக 82 ரன்களையும் பதிவு செய்துள்ளது. 


சின்னசாமி மைதானம் எப்படி?


சின்னசாமி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இன்றைய போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ரன்மழை பொழியலாம். ஹ-ஸ்கோரிங் கேமாக அமையலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது சிறந்த முடிவாக இருக்கும். 


மழைக்கு 80% வாய்ப்பு:


இரவு 7 மணி முதல் 10:30 மணி வரை பெங்களூருவில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டி நேரத்த்ல் மழை வர 80 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒருவேளை அப்படி மழைபெய்து போட்டி கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.


உத்தேச அணி விவரங்கள்:


பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, யாஷ் தயாள், முகமது சிராஜ், ஸ்வப்னில் சிங்


சென்னை: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்