CSK Surprise: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் காத்திருக்குமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் மகேந்திர சிங் தோனி ஆடும் கடைசி போட்டி இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் சிஎஸ்கே:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 17ஆவது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
பிளே ஆப் சுற்றில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு தகுதி பெற 6 அணிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இதற்கு மத்தியில், இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய போட்டியிலும் பெங்களூரு அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
தோல்வி அடையும் பட்சத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ஆடும் கடைசி போட்டியாக இது அமையும் என கூறப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியை நேரில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "போட்டி முடிந்த பிறகு, மைதானத்தில் அனைவரும் காத்திருங்கள். உங்களுக்கு சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது" என பதிவிடப்பட்டுள்ளது.
போட்டி முடிந்த பிறகு, ரசிகர்களிடம் தோனி உரையாற்றுவார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் தோனிக்கு பிரியாவிடை அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2004ஆம் ஆண்டு, வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி அறிமுகமானார்.
கடந்த 2005ஆம் ஆண்டு, இலங்கைக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார். ஐபிஎல்-ஐ பொறுத்தவரையில், மொஹாலியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடினார். கடந்த 2014ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடினார்.