CSK IPL Journey: சிஎஸ்கே, தல தோனியின் படை..! மறக்க முடியாத சென்னை அணியின் போட்டிகள் - தரமான சம்பவங்கள்
Chennai Super Kings IPL Journey:: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்கமுடியாத போட்டிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Chennai Super Kings IPL Journey: ஐபிஎல் வரலாற்றின் மறக்க முடியாத அனுபவங்களை தந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஐபிஎல் என வரும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்தவித அறிமுகமும் தேவையில்லை. ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ரசிகர்களை கொண்ட அணியாக, ஐபிஎல் போட்டியின் முகவரியாகவே சிஎஸ்கே திகழ்கிறது. தோனி தலைமையில் உலகின் தலைசிறந்த வீரர்கள் விளையாடிய, விளையாட விருப்பம் தெரிவிக்கும் வெற்றிகரமான அணியாக உள்ளது. பங்கேற்ற பெரும்பாலான தொடர்களில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதோடு, இதுவரை 5 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில், ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகவும் முக்கியமான சில போட்டிகள் கீழே போட்டியிட்டுள்ளன.
Just In




சென்னை அணியின் மறக்க முடியாத சம்பவங்கள்:
1. சென்னை Vs பஞ்சாப் - 2008 - ஹசியின் அதிரடி சதம்
ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கியது. ருத்ரதாண்டவமாடிய மைக் ஹசி 54 பந்துகளில் 116 ரன்களை குவித்தார். இதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி 240 ரன்களை குவித்தது. பிரமாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஜேம்ஸ் ஹோப்ஸ் மற்றும் சங்ககாரா போராடினாலும், 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த வெற்றி தான் சென்னை அணி மீதான முதல் நம்பிக்கையாக ரசிகர்களிடையே பற்றி பரவியது.
2.சென்னை Vs பஞ்சாப் - 2010 - தோனியின் ருத்ரதாண்டவம்
பஞ்சாப் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், அரையிறுதிக்கு செல்ல கட்டாயம் வெற்றி வேண்டும் என்ற முனைப்பில் இருந்த சென்னை அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் ஷான் மார்ஷ் மற்றும் இர்ஃபான் பதானின் பேட்டிங்கால், 192 ரன்களை குவித்தது. இறுதி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. இர்பான் பதான் வீசிய அந்த ஓவரை தோனி எதிர்கொண்டார். முதல் நான்கு பந்துகளையும் 4,2,6,6 என விளாசி அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். இறுதிவரை ஆட்டமிழக்காத தோனி 29 பந்துகளில் 54 ரன்களை குவித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தார்.
3.சென்னை Vs ராஜஸ்தான் - 2010 - ரன் மழை
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த சென்னை அணியின் முரளி விஜய், 56 பந்துகளில் 127 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக அதிரடியாக ஆடிய மார்கல் 34 பந்துகளில் 62 ரன்களை சேர்த்தார். இதனால், சென்னை அணி ஐபிஎல் வரலாற்றி தங்களது அதிகபட்ச ஸ்கோரான 246 ரன்களை பதிவு செய்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நமன் ஓஜா (55 பந்துகளில் 94 ரன்கள்) மற்றும் ஷேன் வாட்சன் (25 பந்துகளில் 60 ரன்கள்) ஆகியோர் சென்னை ரசிகர்களை கதிகலங்க செய்தனர். ஆனாலும், இறுதியில் அபாரமான பந்துவீச்சை முன்னெடுத்த சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. சென்னை Vs மும்பை - 2012 - கடைசி பந்தில் ட்விஸ்ட்
ஐபிஎல் தொடரின் ஆகச்சிறந்த அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில், முதலில் விளையாடிய சிஎஸ்கே 173 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் சச்சின் மற்றும் ரோகித் சர்மா அதகளம் செய்தனர். ரோகித் சர்மா 60 ரன்களிலும், சச்சின் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த நிலையில் மும்பை அணிக்கு போட்டி சாதகமாக இருந்தாலும், அடுத்த 3 ஓவர்களிலேயே அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது, மும்பை அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய ஸ்மித், கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி மும்பையின் வெற்றியை உறுதி செய்தார். இந்த போட்டி ரசிகர்களுக்கு இதயதுடிப்பை எகிற செய்தது.
5. சென்னை Vs ராஜஸ்தான் - 2008 - ஃபைனலில் முதல் தோல்வி
ஐபிஎல் என்றால் என்ன என்று ரசிகர்கள் முழுமையாக புரிந்து கொள்வதற்குள்ளாகவே, முதல் எடிஷனிலேயே சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கி 163 ரன்களை சேர்த்தது. யூசஃப் பதான் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தினர். கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டபோது, பாகிஸ்தான் வீரர் தன்வீர், பாலாஜி பந்துவீச்சில் சிங்கிள் அடித்து, ராஜஸ்தானின் முதல் மற்றும் ஒரே கோப்பையை வென்று கொடுத்தார்.
6. சென்னை Vs மும்பை - 2010 - ஃபைனலில் முதல் வெற்றி
2010ம் ஆண்டு எடிஷனில் சச்சினின் அபார ஃபார்மால் மும்பை அணி கோப்பையை வெல்வது உறுதி என கூறப்பட்டது. கடும் அழுத்தத்திற்கு மத்தியில் , முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 168 ரன்களை சேர்த்தது. அதேநேரம், கட்டுக்கோப்பான பந்துவீச்சால் மும்பை அணியை தடுமாறச் செய்தது. பேட்ட்கிகின் போது காயம் காரணமாக சச்சின் பாதியிலேயே வெளியேறியதும் மும்பைக்கு பின்னடைவாக அமைந்தது. இதனால் சென்னை 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது முதல் கோப்பை கையில் ஏந்தியது.
மேற்குறிப்பிட்டவை எல்லாம் சென்னை அணியின் மறக்க முடியாத போட்டிகள் ஒரு சில மட்டுமே. இதுபோக ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி பல சம்பவங்களை செய்துள்ளது. உதாரணமாக,
- 2012ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 28 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது
- 2014ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 227 ரன்களை சேஸ் செய்தபோது, சுரேஷ் ரெய்னாவின் ருத்ர தாண்டவத்தால் பவர்பிளேயிலேயே 100 ரன்களை எட்டியது
- இரண்டு ஆண்டு தடைகளுக்குப் பிறகு வந்த முதல் எடிஷனிலேயே 2018ம் ஆண்டு கோப்பையை வென்றது
- 2023ம் ஆண்டு ஐபிஎல் ஃபைனலில் கடைசி பந்தில் பவுண்டரி விளாசி, ஐந்தாவது கோப்பையை கைப்பற்றியது
- 2009ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 116 ரன்களை மட்டுமே அடித்து, பெற்ற வரலாற்று வெற்றி போன்றவை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதவை ஆகும்.