ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று வருகின்றனர்.
10 அணிகளில் பல முக்கிய வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டும், இளம் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கும் விலை கொடுத்து வாங்கப்பட்டும் வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சஹார் ரூ.14 கோடிக்கு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இது இந்த சீசன் ஏலத்தில் இரண்டாவது அதிகப்பட்ச தொகையாகும்.
மேலும், மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தோனியின் தக்கவைக்கப்பட்ட தொகையை விட தீபக் சஹாரின் ஏல தொகை 2 கோடி அதிகம் என்பதுதான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பவுலராக களமிறங்குபவர் தீபக் சஹார். சென்னை அணியின் வெற்றிகளில் இவரது பங்கு அதிகம். அதேபோல், கடைசியாக இந்திய அணி விளையாடிய தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். அதன்படி, வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்ய திட்டமிடும் சென்னை அணி மீண்டும் தீபக் சஹாரை அதிக விலைக்கு எடுத்தது.
முதலில் தீபக் சஹாரை எடுக்க சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், சஹாரை எப்படியாவது மீண்டும் அணிக்கு கொண்டு வர சென்னை அணி விடாது முயற்சி செய்தது. எவ்வளவு தொகையை இதற்காக செலவிடவும் போரடியது.
சென்னை அணியின் கேப்டன் தோனியை கூட அந்த அணி 12 கோடிக்கு தக்கவைத்தநிலையில், தீபக் சஹாருக்கு 14 கோடி என்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்