தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கடந்த மாதம் வென்றது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. இதனால் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு சென்னை அணிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் சென்னை கலைவானர் அரங்கில் இன்று சென்னை அணிக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, வீரர்கள் மற்றும் அதன் உரிமையாளர் என்.ஶ்ரீனிவாசன் மற்றும் அவருடைய மகள் ரூபா குருநாத் ஆகியோரும் பங்கேற்றனர். 




இந்த விழாவில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.ஶ்ரீனிவாசன், “என்னை பொறுத்தவரை இந்த சீசனில் குவாலிஃபையர் போட்டியின் போதே சென்னை அணி கோப்பையை வென்றுவிட்டது. அதாவது அந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், “கிங் இஸ் பேக்… சிறந்த ஃபனிசர்...” என்று புகழ்ந்து இருந்தார். அதுவே சென்னை அணி கோப்பையை வென்ற தருணமாக நான் கருதினேன்” எனக் கூறியிருந்தார். 









ஐபிஎல் தொடரில் அக்டோப்டர் 10ஆம் தேதி நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற 173 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த சமயத்தில் டாம் கரண் வீசிய ஓவரில் கூலாக விளையாடிய தோனி 3 பவுண்டரிகள் அடித்து சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதன்பின்பு விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பதிவை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மற்றும் சென்னை அணியின் கேப்டன் தோனி உள்ளிட்டோரும் உரையாற்றினர். 


மேலும் படிக்க: ‛ராஞ்சியில் தொடங்கியதை சென்னையில் முடிப்பேன்...’ பாராட்டு விழாவில் நெகிழ்ந்து பேசிய தோனி!