ஐ.பி.எல் 2024:



ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக கடந்த 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனை அடுத்து சாம் கர்ரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்ததன் மூலம் வெளியேறியது.


இச்சூழலில் தான் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே10) 59 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.


கடைசியாக பேட்டிங் செய்யும் தோனி:


முன்னதாக இந்த சீசன் முழுதும் இறுதிக்கட்டத்தில் தான் எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்ய வருகிறார். அதன்படி கடைசி ஓவர் அல்லது அதற்கு முந்தைய ஓவரில் களம் இறங்குகிறார். அவர் களம் இறங்கினால் சிக்ஸ் நிச்சயம் என்ற அளவிற்கு சந்திக்கும் பந்துகளை பவுண்டரி லைனுக்கு வெளியே பறக்க விடுகிறார். இதனால் அவர் முன்னதாக ஏன் களம் இறக்கப்படுவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதேபோல் அவர் முன்னதாக களம் இறங்கினால் உடனே அவுட் ஆகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் எம்.எஸ். தோனி ஏன் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வருகிறார் என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் விளக்கம் அளித்துள்ளார்.  


காலில் ஏற்பட்ட காயம்:


இது தொடர்பாக அவர் பேசுகையில், “தோனிக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது.அதையும் தாண்டி அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்தால் அவரால் விளையாடவே முடியாத சூழல் எற்படும். இதனால் தான் கடைசி இரண்டு அல்லது நான்கு ஓவர்கள் மட்டும் தோனி பேட்டிங் செய்கிறார்.


அதேநேரம் முழுமையாக கீப்பிங் செய்து புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். கடைசியாக தோனி களம் இறங்குவதால் அவரால் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று நினைத்து விடாதீர்கள்” என்று கூறியுள்ளார்  சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்.


மேலும் படிக்க: Watch Video: கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கிடைத்த புதிய ஜிம் பார்ட்னர்..யாருன்னு நீங்களே பாருங்க!


மேலும் படிக்க: Mohammed Shami: கே.எல்.ராகுலை திட்டிய லக்னோ உரிமையாளர்..வறுத்தெடுத்த முகமது ஷமி!