ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றிற்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளன. முன்னதாக இந்த சீசனில் பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்து வருகிறது.


கே.எல்.ராகுலை திட்டிய லக்னோ உரிமையாளர்:


முன்னதாக கடந்த மே 8 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 165 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி வெறும் 9.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.


இந்த போட்டி முடிந்த உடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேபத்துடன் திட்டியது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இது ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பதுதெல்லாம் நடக்கத்தான் செய்யும் அதற்காக இந்திய அணியின் முக்கியமான வீரராக இருக்க கூடிய கே.எல்.ராகுலை இப்படியா அவமதிப்பதுபோல் பேசுவது என்று லக்னோ உரிமையாளரை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.


முதலில் அவர் இந்தியாவிற்காக விளையாடும் வீரர் பிறகு தான் ஐபிஎல் போட்டியெல்லாம் என்றும் காட்டத்துடன் கூறி இருந்தனர். ரசிகர்கள் மட்டும் இன்றி கிரிக்கெட் வீரர்களும் லக்னோ அணியின் உரிமையாளரின் இந்த செயலை வன்மையாக கண்டித்தனர்.


எங்களுக்கும் சுயமரியாதை இருக்கு...


இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் லக்னோ அணியின் உரிமையாளரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “வீரர்களுக்கு மரியாதை இருக்கிறது. அணியின் உரிமையாளரான நீங்களும் மிகவும் மரியாதைக்குரிய நபர்தான். உங்களை பலரும் பார்த்து கற்றுக்கொண்டு வருகின்றனர். ஆனால் கேமராவுக்கு முன்பாக இது போன்ற விஷயங்கள் நடப்பது மிகவும் அவமானமான ஒன்றாகும்.


நீங்கள் அதைச் செய்வதற்கு பல வழிகள் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் அதை உடைமாற்றும் அறை அல்லது ஹோட்டல் அறையில் செய்திருக்கலாம்.





களத்தில் செய்ய வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. இதை செய்வதால் நீங்கள் ஒன்றும் செங்கோட்டையில் கொடியை ஏற்றப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், “கே.எல்.ராகுல்  சாதாரண வீரர் கிடையாது உங்களுடைய அணியின் கேப்டன். கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு. இந்த விளையாட்டில் எதுவும் நடக்கலாம். இங்கே நல்ல நாட்களும் மோசமான நாட்களும் இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு வீரர்களுக்கும் மரியாதை இருப்பதால் நீங்கள் பேசுவதற்கு வேறு வழி இருக்கிறது. இது மற்றவர்களுக்கும் மோசமான மெசேஜை கொடுக்கும்”என்று கூறியுள்ளார் முகமது ஷமி.