CSK Vs GT, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்துமா சென்னை? ஷாக் கொடுக்குமா குஜராத்? - இன்று பலப்பரீட்சை

CSK Vs GT, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Continues below advertisement

CSK Vs GT, IPL 2024: சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

Continues below advertisement

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 58 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது.  மும்பை, பஞ்சாப் அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. மீதமுள்ள 8 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன.  இதன் காரணமாக மீதமுள்ள ஒவ்வொரு போட்டிகளின் முடிவும் 8 அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

சென்னை - குஜராத் பலப்பரீட்சை:

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில்  உள்ள மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகளுமே, நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் சென்னை அணி  6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்க, குஜராத் அணி 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.  பிளே-ஆஃப் வாய்ப்பை நீட்டிக்க இரண்டு அணிகளுக்குமே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிக அவசியமாகும். நடப்பு தொடரில் ஏற்கனவே விளையாடிய போட்டியில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி, அதே உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறது. குஜராத் அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பி, பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்க தீவிரம் காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பலம், பலவீனங்கள்:

உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது குஜராத் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்பட்டாலும், அங்கு நடந்த லீக் போட்டிகளிலும் நடப்பு தொடரில் அந்த அணி தோல்விகளை பதிவு செய்துள்ளது. கேப்டன் சுப்மன் கில்லின் மோசமான ஃபார்ம் மொத்த அணியையும் பாதித்துள்ளது. சாய் கிஷோர் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகிய தமிழக வீரர்கள் ஓரளவிற்கு நம்பிக்கை கொடுக்கின்றனர். பந்துவீச்சில் குஜராத் அணியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதே உண்மை. ரஷீத் கானால் கூட நடப்பு தொடரில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. சென்னை அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாதது பின்னடைவாக கருதப்பட்டாலும், கடைசி லீக் போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. இது அணியை உத்வேகப்படுத்தியுள்ளது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் ரகானே, சில போட்டிகளாக சோபிக்க தவறிய ஷிவம் துபேவால் பேட்டிங் ஆர்டர் பலவீனமாக உள்ளது. மேற்குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால், இன்றைய போட்டியிலும் சென்னை அணி தீர்வு காணலாம்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தலா3 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 214 ரன்களையும், குறைந்தபட்சமாக 143 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 206 ரன்களையும், குறைந்தபட்சமாக 133 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

அகமதாபாத் மைதானம் எப்படி?

நடப்பு தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில்,  குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. அதன் பிறகு அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும், சேஸிங் செய்யும் அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம்.

உத்தேச அணி விவரங்கள்:

சென்னை: அஜிங்க்யா ரகானே, ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே, சமீர் ரிஸ்வி, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி , மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே

குஜராத்: விருத்திமான் சாஹா, சுப்மன் கில் , சாய் சுதர்ஷன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷாருக் கான், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர்

Continues below advertisement