இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2024) 17வது சீசனுக்கான எதிர்பார்ப்பு கடந்த 2023 டிசம்பரில் ஏலம் நடத்தப்பட்டதில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஐபில் 2024 சீசன் எப்போது தொடங்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மார்ச் முதல் மே மாதம் வரை தேதியை தேர்வு செய்யாமல் தவித்து வருகிறது.
வருகின்ற ஜூன் 1ம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 17வது சீசனை வரும் மார்ச் 22ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ அறிக்கையின்படி, மகளிர் பிரீமியர் லீக் பிப்ரவரி 22 முதல் மார்ச் 27 வரை பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு WPL சாம்பியனாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லீக் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே வேறு நாடுகளில் நடத்த விரும்பாத பிசிசிஐ, பாதுகாப்பாக இந்தியாவில் நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ நாங்கள் ஐபிஎல் அட்டவணையை பற்றி விவாதித்தோம். நாடாளுமன்ற தேர்தல் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தல் ஐபிஎல் நடைபெறும் நேரத்தில் வருகிறது.
இந்தியாவில் இருந்து ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றும் ஐடியா இல்லை. நாடாளுமன்ற தேர்தல் அட்டவணைக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து, ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்னெடுத்து செல்போம். ஐபிஎல் முழு போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்” என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் பிசிசிஐ, டாடா குழுமம் அதன் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக அறிவித்தது.
கடந்த 2009 மற்றும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இரண்டு முறை ஐபிஎல் போட்டியானது வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் முழுவதுமாக நடந்த நிலையில், 2024ம் ஆண்டு லீக் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பார்க்க மிக ஆர்வமாக இருக்கும். இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. இந்த மாபெரும் போட்டி வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தொடங்குகிறது. ஐபிஎல் முடிந்த உடனேயே டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் வீரர்களுக்கு சோர்வுக்கு ஏற்படும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.