CSK Ravindra Jadeja: இந்திய அணியில் மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், போதுமான அங்கீகாரம் கிடைக்காத வீரராகவே ரவீந்திர ஜடேஜா திகழ்கிறார்.
சிஎஸ்கே - ராஜஸ்தான் டீலிங்
அடுத்த ஐபிஎல் போட்டிக்கு இன்னும் கிட்டத்தட்ட 5 மாதங்கள் உள்ளன. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு இடையேயான, ட்ரேடிங் பேச்சுவார்த்தை ரசிகர்களிடையே இப்போதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சனை சென்னை அணிக்கு விட்டுக் கொடுத்து, அதற்கு மாற்றாக ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை வளைத்துப்போட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தீவிரம் காட்டுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கொண்டாடப்படாத ஜாம்பவான்:
சர்வதேச போட்டியில் இந்திய அணிக்கும், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரவீந்திர ஜடேஜா மிகப்பெரும் சேவையாற்றியுள்ளார். ஆனால், அவருக்கு இரண்டு இடங்களிலுமே சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, கோலி மற்றும் ரோகித் உடன் சேர்ந்து ஜடேஜாவும் அந்த ஃபார்மெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், மற்ற இருவருக்கும் கிடைத்த அளவிலான ஊடக வெளிச்சம் ஜடேஜாவிற்கு கிடைக்கவில்லை. இந்திய அணி கண்ட சிறந்த ஆல்-ரவுண்டருக்கு மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் கடைசியாக ஒருமுறை பேச கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சென்னை அணியிலோ, தோனியின் பேட்டிங்கை காண்பதற்காக ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என சொந்த ரசிகர்களே மைதானத்தில் கூக்குரல் எழுப்பியதெல்லாம் மறக்க முடியாத சம்பவமாகும்.
ஜடேஜா ஐபிஎல் பயணம்:
கடந்த 2008ம் ஆண்டு வெறும் ரூ.12 லட்சத்திற்கு ராஜஸ்தான் ராயல் அணியால் ஏலத்தில் ஜடேஜா ஏலத்தில் எடுக்கப்பட்டார். முதல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடினாலும், 100+ ரன்களை மட்டுமே அடித்ததோடு, பெரிதாக பந்து வீசும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. 2009ம் ஆண்டு இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்க, அதில் கிடைத்த அனுபத்தால் அடுத்த ஐபிஎல் சீசனில் பேட்டிங்கில் அசத்தியதோடு 6 விக்கெட்டுகளையும் சாய்த்தார். ஆனாலும் அடுத்து நடந்த சில நிகழ்வுகளால், 2010ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
சிஎஸ்கேவில் இணைந்த ஜடேஜா..
2012ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடனான கடும் போட்டிக்கு பிறகு, ரூ.9.72 கோடி மதிப்பில் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பிறகு, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்ட காலத்தை தாண்டி, மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காகவே ஜடேஜா விளையாடி வருகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் அணியின் நட்சத்திர வீரராக திகழ்வதோடு, ஃபீல்டிங்கின் அணியில் மற்ற வீரர்களுக்கான முன்மாதிரியாகவும் ஜடேஜா செயல்பட்டு வருகிறார். அவரது அபாரமான பங்களிப்பை பாராட்டும் விதமாகவே, கடந்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக தோனியை காட்டிலும் அதிகமாக, அதாவது ரூ.18 கோடி செலவிட்டு ஜடேஜாவை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது.
அசகாய ஆல்-ரவுண்டரின் புள்ளி விவரங்கள்
ஐபிஎல் போட்டிகளில் ஜடேஜா ஒட்டுமொத்தமாக 254 போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி, ரோகித் சர்மா மற்றும் கோலி வரிசையில் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் ஜடேஜா ஐந்தாவது இடத்தில் உள்ளார். அதேநேரம், சென்னை அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் தோனிக்கு அடுத்தபடியாக ஜடேஜா (200) இரண்டாவது இடத்தில் உள்ளார். பேட்டிங்கில் 5 அரைசதங்கள் உட்பட 3260 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 77 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 2023ம் ஆண்டு சீசனின் சென்னை அணி கோப்பையை வெல்லவும் ஜடேஜாவின் பேட்டிங்கே முக்கிய பங்காற்றியது.
பந்துவீச்சில் 170 விக்கெட்டுகளை சேர்த்ததோடு, சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் திகழ்கிறார். அவரது எகானமி வெறும் 7.76 மட்டுமே ஆகும். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதுவரை 109 கேட்ச்களை பிடித்து, ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இது அவரது ஆல்-ரவுண்டர் திறமைக்கான அடையாளமாகும்.
ஜடேஜாவின் தனித்துவமான சாதனைகள்:
- ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில் ஜடேஜாவும் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். 2021ல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் படேல் ஓவரில் 37 ரன்களை குவித்தார்
- 2000 ரன்கள், 100 விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்ச்களில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார்.
ஜடேஜாவின் சொத்து மதிப்பு:
சர்வதேச போட்டிகள், ஐபிஎல் மற்றும் விளம்பர தூதர்கள் வாயிலாக, ஜடேஜா ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. அவரது மொத்த சொத்து மதிப்பு 120 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. உணவகம் மற்றும் ரியல் எஸ்டெட் ஆகிய பிரிவுகளில் முதலீடும் செய்துள்ளார். பல விதமான சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார். ஜடேஜாவின் மனைவி ரிவாபா, குஜராத்தில் அமைச்சராகவும் உள்ளார். இந்த தம்பதிக்கு நித்யானா ஜடேஜா எனும் பெண் குழந்தையும் உள்ளது.