திங்கள்கிழமை (மே 29) நடைபெற்ற ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) குஜராத் டைட்டன்ஸ் அணியை த்ரில்லிங் போட்டியில் தோற்கடித்து ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ரவீந்திர ஜடேஜா கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்களை அடித்து லைனைக் கடக்க உதவினார். சென்னை அணி இம்முறை கோப்பையை வென்றிருப்பது அந்த அணியின் ஒட்டுமொத்த முயற்சி ஆகும். அணியில் எல்லா வீரர்களுமே பங்களித்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வென்று, ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை கைப்பற்றியுள்ள சென்னை அணி மும்பை அணியை சமன் செய்துள்ளது. 


மழையால் ஓவர்கள் குறைப்பு


இதுவரை இல்லாத வகையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கவிருந்த ஞாயிற்றுக்கிழமை மழையால் கைவிடப்பட்டு, பின்னர் திங்கள் கிழமை போட்டி துவங்கி, செவ்வாய் கிழமை வரை கடந்து, ரிசர்வ் நாளில் முடிவு எட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் ரிசர்வ் நாளிலும் மழை பெய்ய, ஆட்டம் மேலும் தமாதமானது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் 15 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால் இலக்கு 215 இல் இருந்து 171 ஆக மாற்றப்பட்டது. சென்னை அணியின் கான்வே நன்றாக ஆடி ரன்னை உயர்த்த, கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் தொடர்ந்து நான்கு யார்க்கர்களை கச்சிதமாக வீசினார். அந்த நான்கு பந்துகளில் அவர் வெறும் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். 



கோப்பையை வென்ற சென்னை


ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறை வெல்லும் மூன்றாவது அணி என்ற பெயரை பெற குஜராத் அணி வெறித்தனமாக விளையாடியது. ஆனால் மோஹித் ஷர்மா ஐந்தாவது பந்தில் யார்கரை கொஞ்சம் மிஸ் செய்ய, அதனை சிக்சருக்கு அனுப்பினார் ஜடேஜா. ஜிடி அணியினர் மீது பிரஷர் அதிகரிக்க, கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மோஹித்திடம் ஓடி வந்து நீண்ட நேரம் பேசினார். ஆனால் மோஹித் இந்த முறை லைன் மற்றும் லெங்த்தை முழுவதும் தவறவிட்டார். ஜாடேஜாவின் கால்களில் லோ ஃபுல் டாசாக வீச, அதனை லேசாக தட்டி பவுண்டரிக்கு அனுப்பினார் ஜடேஜா.


தொடர்புடைய செய்திகள்: CM Stalin Wish CSK: 'தோனியின் தலைமையின் கீழ் 5வது கோப்பை..' சி.எஸ்.கே.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!


ராயுடு ஓய்வு


இந்த பட்டத்தை வென்றதன் மூலம், மும்பை இந்தியன்ஸுடன் இணைந்து 5 கோப்பைகள் வென்று சிஎஸ்கே மிகவும் வெற்றிகரமான அணியாக மாறியது மட்டுமல்லாமல், அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற வீரர் என்ற பெருமையையும் அம்பதி ராயுடு பெற்றார். இந்த போட்டியோடு அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது. தோனி கோப்பையை அவரது கையில் வாங்க சொன்னது நேற்றைய போட்டியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு ரோஹித் ஷர்மா மட்டுமே ஒரு வீரராக 6 முறை கோப்பையை வென்ற வீரராக இருந்த நிலையில், ராயுடு அவரை சமன் செய்தார். மறுபுறம், எம்.எஸ். தோனி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று, கீரன் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் சமன் செய்தார்.






ராயுடு பேட்டி 


போட்டிக்குப் பிறகு, ராயுடு உணர்ச்சிவசப்பட்டு, தனது வாழ்க்கையில் இது ஒரு விசித்திரமான கதை என்று கூறினார். "இது ஒரு விசித்திரக் கதை, நான் இதற்கு மேல் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. இது நம்பமுடியாத விஷயம். சென்னை, மும்பை போன்ற சிறந்த அணிகளில் விளையாடியது உண்மையில் அதிர்ஷ்டம். இந்த வெற்றி எனது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். இந்த வெற்றியோடு என் 30 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு முடிந்ததில் மகிழ்ச்சி. இந்த தருணத்தில் எனது குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன், என் தந்தைக்கு நன்றி தெரிவிக்கவும் விரும்புகிறேன், அவர் இல்லாமல் நான் இன்று இங்கு இருந்திருக்க முடியாது," என்று அவர் கூறினார்.