ஐ.பி.எல் 2024:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்னும் மீதி இருப்பது குவாலிபியர் 2 மற்றும் இறுதிப் போட்டிதான். அந்தவகையில் குவாலிபியர் இரண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மே 24 நடைபெற உள்ளது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடம் மே 26 ஆம் தேதி மோதும்.
சோகத்தில் இருக்கும் ஆர்.சி.பி:
முன்னதாக நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. அதன்படி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தி இருந்தது சஞ்சு சாம்சன் படை.
இந்த தோல்வியின் மூலம் 17 வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த தோல்வி பெங்களூரு அணி வீரர்கள் மற்றும் அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அம்பத்தி ராயுடுவின் நினைவூட்டல்:
இதனிடையே பெங்களூரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ப்ளேஆப் போட்டியின்போது சென்னை அணியை வீழ்த்தியதை கோப்பையை வென்றதைப்போல் அந்த அணி வீரர்கள் கொண்டாடியது தான். இதனை அடிப்படையாக கொண்டே நேற்று இரவு முதல் பெங்களூரு அணியை கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 5 முறை கோப்பையை வென்ற சூழலில், சிஎஸ்கே அணியின் ஜடேஜா, ரஹானே இருவரும் 5 விரல்களையும் காட்டிய புகைப்படத்தை பதிவிட்டதோடு, ”5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியிடம் இருந்து ஒரு அன்பான நினைவூட்டல். சில நேரங்களில் கண்ணியமாக நினைவூட்டுவது அவசியம்தான்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ஆர்சிபி ரசிகர்களை கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Viral Pics: ஆர்சிபி தோல்வியை அட்டகாசமாக கொண்டாடிய துஷார் தேஷ்பாண்டே.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
மேலும் படிக்க: Watch Video: 16 நாட்களில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. நியூயார்க் நாசாவ் ஸ்டேடியம் இன்னும் தயாராகவில்லையா..?